-->

Wednesday, November 28, 2012

மரணத்தை ஏற்படுத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி.

பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்கான நிகழ்ச்சி என்று சொல்லி கொண்டு - மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்ப்பதாக தான் உள்ளன, மன நல ஆலோசனை கூறுவோரின் வழிகாட்டுதல்களால் ஆன நிகழ்ச்சிகள். நான்கு சுவர்களுக்குள் நாம் பேசி தீர்க்க வேண்டிய அந்தரங்க குடும்ப விஷயங்களை - பொது வெளியில், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் தங்கள் சுயநலத்துக்காக "பொரணி" பேசுகிறார்கள். காதலும், கள்ளக்காதலும், கூடா நட்பும் பார்ப்பவர்களுக்கு சுவராசியமான தாக இருக்கலாம்.

எப்போதும் பிறரின் அந்தரங்ககளை பார்ப்பதில், கேட்பதில் அலாதி சந்தோஷம் தான். ஆனால் இத்தகைய செயல்களால், நம் கையை கொண்டே நம் கண்ணை குத்த வைக்கும் ஈனச் செயல் என்று பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுவோராவது நினைக்க வேண்டாமா? உணர்ந்ததாக தெரியவில்லை. எதிரியோடு சண்டை போடுவது போல தம் உறவுகளோடு மல்லுக்கட்டி கொண்டு, தம் வாழ்க்கை துணையை பொது இடத்தில் கோப எரிச்சலால் அநாகரீகமாய் பேசுகிறோம்...

சேர்ந்து வாழக்கூடிய மன நிலையில் வாழ்க்கை துணை இருந்தாலும் - தம் பேச்சுகள், தம் செயல்கள் சாதகமான மனநிலையை சாகடித்து விடுமே என்கிற புரிதல் கொஞ்சமும் இல்லாமல் - ஒரு பெண் தம் துணையை பற்றி தொலைக்காட்சியில் கருத்து சொல்ல போக - பொது வெளியில் தங்கள் வாழ்க்கை ஏளனப்படுத்தப்படுகிறதே என்கிற விரக்தியில் ஒரு கணவன் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டான்.

தினமலர் இணையத்தில் வாசித்த செய்தி. தனியார், "டிவி' நிகழ்ச்சியில் மனைவி புகார் செய்ததால், மனமுடைந்த லாரி டிரைவர், தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம், குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர், லாரி டிரைவர் சின்னராசு, 24. இவருக்கும், தண்டராம்பட்டைச் சேர்ந்த மாலதி என்பவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சின்னராசு, கேரளாவுக்கு லாரி ஓட்டி சென்ற போது, சந்தியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை 2 வது திருமணம் செய்து கொண்டார்; இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளான். 2 வது திருமணம் செய்து கொண்டதால், இருவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தனியார், "டிவி' நிகழ்ச்சியில், கணவர் 2 வது திருமணம் செய்தது குறித்து, அவர் மீது மாலதி, சரமாரி குற்றச்சாட்டு கூறினார்.

அந்த நிகழ்ச்சியின் போது, மொபைல்போன் மூலம், சின்னராசுவிடம் பேசினார். அப்போதும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த சின்னராசு, நேற்று முன்தினம், தண்டராம்பட்டு வீட்டில், சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னராசுவின் தந்தை தங்கராஜ், போலீசில் புகார் செய்தார். புகாரில், "என் மகன் மீது, தனியார், "டிவி' நிகழ்ச்சியில், மாலதி புகார் கூறினார். இதனால், அவமானமடைந்த என் மகன் சின்னராசு, தற்கொலை செய்து கொண்டார்' என, கூறியுள்ளார்; போலீசார் விசாரிக்கின்றனர்.

நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்த கணவனின் செயல் தவறு தான். மறுக்க முடியாது. அதை முறைப்படி சட்டரீதியாக தீர்ப்பது எப்படி உள்ளது - அதை விடுத்து, பொது மேடையில் விவாத பொருளாக்கி நாமென்ன சாதிக்க போகிறோம். காவல்துறைக்கு குடும்ப விவகாரம் போனால் கூட - காதும், காதும் வைத்த மாதிரி பேசி தீர்த்து கொள்ளவே முயல்வார்கள். "அடிச்சுக்குவாங்கய்யா... நாளைக்கே ஒண்ணா சேர்ந்துக்குவாங்க..." என்று சேர்த்து வைக்க முயல்வார்கள்.

சேர்ந்து வாழவே வாய்ப்பில்லாத பட்சத்தில் தான் அடுத்த கட்டத்திற்கு போவார்கள். இத்தகைய மரண நிகழ்வுகள் - அந்த தொலைக்காட்சிக்கு மேலும் ஒரு விளம்பரம் என்று தான் சொல்ல வேண்டும்... இவர்களின் சுயரூபம் குறித்த நமது முந்தைய பதிவு. நிகழ்ச்சி தயாரிப்போரை தயாரிக்காதே என்றா சொல்ல முடியும். இயலாது. இது ஒரு வியாபாரம். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்கள். பாதிக்கப்பட்டோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

கோபத்தில், எரிச்சலில் எதை வேண்டுமானாலும் பேசி விடக்கூடாது. பிறகு அதனாலான இழப்புகள் நமக்கே.சேர்ந்து வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் தானே - தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கெடுத்தது. ஆனால்?  சம்பந்த அந்த நபரின் மரண செய்தியை கேட்டு அந்த பெண் மனது என்ன பாடுபடும். தொலைக்காட்சிகளே, கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.
Download As PDF

No comments:

Post a Comment