பெரும்பாலும்
மாணவர்களின் காதலுக்கு தான் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நடவடிக்கை
எடுப்பர். பள்ளியில் மாணவர்கள் தான் அடித்து கொண்டு, ஆசிரியர்களால்
நடவடிக்கை எடுக்கப்படுவார்கள். ஆனால் நாம் வாசித்த செய்தி ஒன்றில், இது
முற்றிலும் மாறுப்பட்டு - ஆசிரியை மீது காதல் கொண்டு ஆசிரியர்கள் இருவர்
மோதி கொண்ட சம்பவத்திற்கு - மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த
வெட்கக்கேடான சம்பவம் நடந்தேறி உள்ளது.மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டிய ஆசிரியர்களே பாடமாகி போனது வருத்தமான விஷயம் தான். நாகரீகம் கருதி, சம்பந்தப்பட்டவர் நலன் கருதி ஊர் மற்றும் பள்ளி பெயர், ஆசிரியர் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. செய்தி தான் முக்கியமே தவிர - செய்தியில் அடிபட்டவர்கள் அல்ல. தவறை அவர்கள் உணர்வார்கள்.
"திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார் ________, 40. இதே பள்ளியில், ________, ________, ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். தலைமை ஆசிரியையு டன், ஆசிரியர்களான ________, ________, ஆகியோர், நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வாரம், பள்ளி வளாகத்தில், மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் இருவரும், தகாத வார்த்தைகளால் பேசியதோடு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதை வேடிக்கை பார்த்த மாணவர்கள், தங்களது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை விவரித்தனர். இதை அடுத்து, கடந்த புதன் அன்று, மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் உதவி துவக்கக் கல்வி அலுவலர் கண்ணய்யா ஆகியோர், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
விசாரணையில், நடந்த சம்பவம் உண்மை என, தெரிந்ததை அடுத்து, தலைமை ஆசிரியை ________ வேறொரு துவக்கப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.ஆசிரியர் __________ மற்றொரு துவக்கப் பள்ளிக்கும், மற்றொரு ஆசிரியர் __________ வேறு துவக்கப் பள்ளிக்கும், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்" காவல்துறை வரை சென்றுள்ளது காதல் விவகாரம்.
ஆசிரியர்களுக்கும் நிறைய நன்னடத்தை விதி வைக்க வேண்டும் போலும். இதனால் தானோ என்னவோ அரசு - அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வருகை பதிவேட்டிற்கு பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த உள்ளது. சமீபத்தில் வந்த சாட்டை திரைப்படத்தில் - ஆசிரியர்களின் எல்லா தகிடுதத்தங்களையும் வெளிக்காட்டி இருந்தனர் "மேற்கண்ட காதல் சம்பவத்தை தவிர்த்து"...
பணியிடத்தில் எப்படி இருக்க வேண்டும், சக பணியாளர்களிடம் எப்படி பழக வேண்டும் என்கிற ஒழுங்கு விதி கூட தெரியாமல் ஆசிரியர்களாக இருப்பது கண்டிக்க வேண்டிய ஒன்று. இவர்கள் எப்படி மாணவ மணிகளுக்கு சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். மாணவர்களை தம் செயல்களால் ஆசிரியர்களே கெடுத்தது போலாகி விடாதா? இன்றைக்கு அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு - நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நல்ல ஊதியம்.
எத்தனை எத்தனை தேர்வெழுதி இன்று ஆசிரியர் பணியை அடைய வேண்டி உள்ளது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி பணி செய்ய வேண்டாமா? நல்லாசிரியர் விருது பெற்றால் மட்டும் - நாம் செய்தியாக போவதில்லை. இத்தகைய கெட்ட செய்திகளாலும் செய்தி ஆகலாம். எதில் செய்தியாக வருகிறோம் என்பது நம் செயல்பாடுகளை பொறுத்து அமையும்.

தம் பணியை செம்மையாக செய்கிற ஆசிரியர்களுக்கு மத்தியில் இத்தகைய ஆசிரியர்கள் இருப்பது - நல்ல ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர் தான்.
வேலை கிடைக்கும் வரை என்ன பாடுபடுகிறோம். வேலை கிடைத்த பின் என்னவெல்லாம் செய்கிறோம். அதுவும் அரசு வேலை கிடைத்துவிட்டால் போதுமே. தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஆசிரியர்கள், எங்கும் பணி செய்ய முடியாத அளவு பணி இழப்பார்கள். புரிந்து செயல்படுவது நல்லது.
பதிவுக்கு உதவி -தினமலர் செய்தி.
No comments:
Post a Comment