-->

Monday, September 24, 2012

பள்ளி பஸ்களுக்கு புதிய விதிமுறைகள்: நடைமுறையில் சாத்தியமா?

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்று வருவதற்காக இயங்கும் பள்ளி பஸ்களை முறைப்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த வரைவு விதிமுறைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, இதனை அறிவிக்கையாக வெளியிட்டு கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். சென்னையில் பள்ளி மாணவி பள்ளி பஸ்ஸின் ஓட்டைவழியே கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை, தானே எடுத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு உருவாக்கியுள்ள வரைவு விதிமுறைகள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படப் போகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழக அரசின் வரைவு விதிமுறைகள் இதோ...

ள்ளிக்கூட பஸ்களை இயக்கும் டிரைவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். புதுப்பிக்கப்படா விட்டால் அந்த அனுமதி முடிவுக்கு வந்துவிடும்.
 
ள்ளிக்கூட பஸ்சை வேறு நபர்களை ஓட்ட அனுமதிப்பது, சிகப்பு சிக்னல்களை மீறிச் செல்வது, சாலை லேன்களை மீறுவது போன்ற குற்றங்களில் டிரைவர்கள் ஓராண்டில் இரண்டு முறைக்கு மேல் சிக்கி இருக்கக்கூடாது. ஆபத்தான டிரைவிங், குடித்து விட்டு ஓட்டுவது ஆகிய குற்றங்களில் ஒரு முறை கூட சிக்கி இருக்கக்கூடாது.

தினமும் பஸ்சை ஓட்டும்போது அதில் காணப்படும் குறைபாடுகளை லாக் புத்தகத்தில் ஓட்டுநர் குறிக்க வேண்டும். குறைபாடுகள் அனைத்தும் உடனுக்குடன் நீக்கப்படுகிறதா என்பதையும் அவர் உறுதி செய்ய வேண்டும்.

காக்கி பேண்ட், காக்கிச் சட்டையை ஓட்டுநர்கள் அணிய வேண்டும். சட்டைப் பையின் மேல் வெள்ளை நிறத்தில் பெயர் பிளேட் இருக்க வேண்டும். அதில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் வழங்கும் அடையாள அட்டையையும் வைத்திருக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பஸ்சை இயக்க வேண்டும். 40 கிலோ மீட்டர் வேகத்தைத் தாண்டாத வகையில் பஸ்சில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும்போது பஸ்சில் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர், நடத்துநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 21 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டவராகவும் அவர் இருக்க வேண்டும்.

ள்ளிக் குழந்தைகள் பஸ்ஸில் ஏறி இறங்கும்போது அவர்களைக் கவனிக்கும் உடற்தகுதி அந்த உதவியாளர்களுக்கு இருக்க வேண்டும். அவர்களுக்கு, அந்தக் குழந்தைகளைக் கையாளுவதற்கும் கவனிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

வீடு திரும்பும்போது, நிறுத்தத்தில் காத்திருக்கும் பெற்றோரிடம் குழந்தையை உதவியாளர் கொண்டு சேர்க்க வேண்டும். பள்ளிக்கூட நிறுத்தத்தில் முதலில் உதவியாளர் இறங்கி, ஒவ்வொரு குழந்தையும் பஸ்சில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உதவி செய்ய வேண்டும்.
 
பெண் குழந்தைகள் மட்டுமே செல்லும் பஸ்களில் பெண் உதவியாளர்கள் இருக்க வேண்டும்.

ள்ளிக்கூட பஸ்களில் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். முன்னும் பின்னும் பள்ளிப் பேருந்து என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் நடந்து செல்வது போன்று கருநீலத்தில் 60 செ.மீ. விட்டத்தில் படமாக வரைய வேண்டும்.

ஸ்சின் இடதுபக்கப் பின்புறத்தில் பள்ளியின் முகவரி, தொலைபேசி எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். வலது பக்கப் பின்புறத்தில் பள்ளியின் போக்குவரத்து பொறுப்பு அதிகாரி, ஆர்.டி.ஓ. அலுவலகம், போலீஸ் அதிகாரி ஆகியோரின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக புகார்களை அனுப்புவதற்கான இ-மெயில் முகவரி தொடங்கப்பட்டு அதையும் எழுதி வைக்க வேண்டும்.

ஸ்சின் இடதுபுற முன் பக்கத்தில் மட்டும் ஒரே ஒரு வாசல், நல்ல கதவோடு இருக்க வேண்டும். ஃபுட் போர்டு தரையிலிருந்து 250 மில்லி மீட்டர் உயரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ட்டுநர் பகுதி, தனி கேபினாகப் பிரிக்கப்பட வேண்டும். இருக்கைகள் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். பைகள் வைப்பதற்காக தனி அறைகள் சீட்டுக்குக் கீழே அமைக்கப்பட வேண்டும். பஸ்சின் தரைப் பகுதி, துண்டு துண்டாக இணைக்கப்படாமல் ஒரே ஷுட்டாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் பழுது ஏற்பட்டால் அந்த முழு ஷுட்டும் மாற்றப்பட வேண்டும்.

ன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்க வேண்டும். பஸ்சின் பின் பகுதியில் அவசர வெளிவாயில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். அந்தக் கதவை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் உடைப்பதற்கு வசதி செய்திருக்க வேண்டும். தீயணைக்கும் கருவிகள், முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். சீட் எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகளை ஏற்றக் கூடாது.

ள்ளிக்கூட பஸ்களுக்கான தகுதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் மண்டலப் போக்குவரத்து இணை ஆணையர் அல்லது துணை ஆணையரைத் தலைவராகக் கொண்ட தனிப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு காலாண்டிலும் பஸ்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

ள்ளிக்கூட பஸ்களுக்காக தலைமை ஆசிரியர் தலைமையில் தனி பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்கப்பட்டு, அது மாதம் ஒரு முறை கூட வேண்டும். அக்கூட்டத்தில் கூறப்படும் ஆலோசனைகள் பதிவு செய்யப்பட வேண்டும். அந்தப் பதிவுகள் அனைத்தும் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட உள்ள பள்ளிக்கூட போக்குவரத்துக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் அனுப்பும் ஆலோசனைகளை இக்குழு பரிசீலனை செய்யும்

ள்ளிக்கூட பஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்க மாவட்ட அளவிலான துறைகளுக்கு இடையேயான குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவுக்கு சப்-கலெக்டர், உதவி கலெக்டர் அல்லது வருவாய்  வட்டாட்சியர் தலைமை வகிப்பார். ஆர்டிஓ அதன் உறுப்பினர் செயலராகவும் துணை போலீஸ் கண்காணிப்பாளர், மாவட்டக் கல்வி அதிகாரி, தலைமைக் கல்விஅதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அதன் உறுப்பினர்களாக இருப்பர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இக்குழு கூடி, பள்ளி பஸ்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும்.



நிரந்தரத் தீர்வு எது?

ள்ளி வாகனங்களை இயக்குவது குறித்து ஏற்கெனவே சட்டம் உள்ளது. இப்போது இது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலப் போக்குவரத்து அலுவலக (ஆர்.டி.ஓ.) அளவிலும் மண்டலப் போக்குவரத்து இணை ஆணையர் தலைமையில் ஒரு சிறப்புப் பிரிவு தொடங்கப்படவேண்டும் என்பதும், பள்ளிகள் தங்கள் பஸ்களை இந்தச் சிறப்புப் பிரிவின் முன்னிலையில் ஆய்வுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதும் மிகவும் நல்ல விஷயங்கள். தமிழக அரசின் விதிமுறைகள் பாராட்டத்தக்கவை. ஆனால் எதையும் நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் உள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமானால், பள்ளிகளை அருகமைப் பள்ளிகளாக அறிவிப்பது ஒன்றுதான் நல்ல வழிமுறை. பள்ளிக்கு அருகில் இருக்கும் இடங்களைச் சேர்ந்த பிள்ளைகளை அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்களா என்பதை உறுதி செய்யவேண்டும். பெற்றோர் தங்கள் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் பள்ளிகளில் ஏன் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்துள்ள எல்லா வசதிகளும் இருக்கிறதா என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் அந்தப் பள்ளி தரமானதாக இருக்க முடியும். பெற்றோர்களும் அருகமைப் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளை சேர்க்க முன் வருவார்கள்.

ஆர்.டி.ஓ. அளவில் சிறப்புப் பிரிவு தொடங்கப்படவேண்டும் என்பதைப் போல, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மண்டலப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், கல்வியாளர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை நியமிக்கவேண்டும். பள்ளி வாகனங்கள் சாலையில் செல்லும்போது, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி சோதனை செய்யும் அதிகாரத்தை அக்குழுவுக்கு வழங்க வேண்டும். அப்படிச் செய்தால், பள்ளி பஸ்கள்  விபத்துக்கு ஆளாகாமல் தடுக்க முடியும்.-

- பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொதுச் செயலர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை)
 


பொதுப் பேருந்துகளில் செல்லும் குழுந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம்

குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களையே பள்ளி பஸ்களுக்கான ஓட்டுநர்களாக நியமிக்க வேண்டும் என்பது நல்ல விதிமுறை. பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், இலவச பஸ் பாஸ் வாங்கிக்கொண்டு பொதுப் பேருந்தில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பும், அந்தக் குழந்தைகளின் உரிமையும் பேணப்படவேண்டும். காலைநேரப் போக்குவரத்து நெருக்கடியில், பொதுப் பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்கும் தொல்லைகள் சொல்லி மாளாதவை. இவை எல்லாவற்றுக்குமான தீர்வைப் பற்றியும் உயர்நீதிமன்றம் சிந்திக்க வேண்டும். கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பிடத்திற்கு அருகே ஒரு கிலோ மீட்டர் சுற்றுப் பகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளில்தான் குழந்தைகளை சேர்க்கவேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற நிலையை ஏற்படுத்த, பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

பள்ளி பஸ்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பள்ளிகள் அளவிலேயே பொறுப்பான ஆசிரியர் ஒருவர் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும். அந்த ஆசிரியர், பள்ளி பஸ்களில் தினந்தோறும் ஏறி, உரிய பாதுகாப்பு இருக்கிறதா, பஸ்கள் பராமரிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வரவேண்டும்.

- ‘ஆயிஷா’ நடராஜன் (எழுத்தாளர் - பள்ளித் தலைமை ஆசிரியர் )



அருகமைப் பள்ளி அவசியம்

வாகனங்களுக்கான உரிமங்கள் வழங்குவதில் உள்ள ஊழல்கள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். சரியாக வாகனம் ஓட்டத் தெரியாதவர்களுக்கு உரிமம் வழங்கக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, 10 வயதுக்குட்பட்ட குழந்தை களை மழலையர் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கும்போது, வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிகளில்தான் சேர்க்கவேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, குழந்தைகள் நடந்து சென்று படித்துவிட்டு வரும் வகையில் அக்குழந்தை படிக்கும் பள்ளி வீட்டிற்கு அருகமையில் இருக்கவேண்டும். பள்ளி அமைந்துள்ள வட்டத்திற்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே அந்தப் பள்ளியில் சேர்க்கவேண்டும். குழந்தையின் உடல் நலம், கல்வி நலம் இரண்டையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று கல்வி கற்க ஆகும் பயண நேரம் அரைமணி நேரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். அதிக தூரம் பயணம் செய்து படிக்கும் குழந்தைகளால், படிப்பதற்காக அதிக நேரத்தை செலவிட முடியாது. அதன் உடல் நலமும் பாதிக்கப்படும். எனவே அருகமைப் பள்ளிகள்தான் நிரந்தரத் தீர்வாக முடியும்.

அதே நேரம் பொதுப் பள்ளிகள் தரமான கல்வியை அளிக்க முன்வரவேண்டும். பள்ளி வாகனத்தில் வந்து செல்லும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அந்தப் பள்ளி நிர்வாகமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- எஸ்.எஸ்.ராஜகோபாலன் (கல்வியாளர்)
Download As PDF

No comments:

Post a Comment