ஜி.மீனாட்சி
ஏழாம் வகுப்பு படிக்கும் மோகன்ராஜுக்கு சரிவரப் பேச முடிவதில்லை. நடக்கும்போதும் ஒரு தடுமாற்றம். ஆனாலும் விடாமல் உடல் தசைகளை இயக்குவதற்காக சைக்கிளிங் செய்கிறான். “முன்பெல்லாம் இதைவிட மோசமாக இருப்பான். இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றித்தான் நடப்பான். வாரம் இரண்டு முறை இங்கு வந்து உடலியக்கப் பயிற்சி பெறுவதால் இந்த முன்னேற்றம். இப்போது ஓரளவுக்கு நன்கு நடக்கிறான்; பேசுகிறான்” என்கிறார், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜின் தாய் கலைவாணி. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நாகராஜ், தற்போது நுங்கம்பாக்கத்திலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் 7-வது வகுப்பு படித்து வருகிறான். வாரந்தோறும் இங்கு வந்து உடலியங்கு பயிற்சி பெற்றுச் செல்கிறான். இடம்: சென்னை சேத்துப்பட்டு மெக்கனிக்கல் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்.எஸ்.ஏ.) செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின்கீழ் (Inclusive Education for Disability) இயங்கி வருகிறது. சேத்துப்பட்டிலுள்ள பகல் நேரப் பாதுகாப்பு பயிற்சி மையம். சென்னை மாவட்டத்திலுள்ள ஐந்தாவது மண்டலத்தின்கீழ் (புரசைவாக்கம்) இந்த மையம் இயங்குகிறது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்,பெருமூளைவாதம், மன இறுக்கம், மூளை முடக்குவாதம் போன்ற குறைபாடுகளை உடைய 20 குழந்தைகளுக்கு இந்த மையத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது. உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மோகன்ராஜ், நாகராஜ் போல சென்னையிலுள்ள அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் வாரம் இரு முறை இங்கு வந்து உடலியக்கப் பயிற்சியும் பெற்றுச் செல்கிறார்கள். அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் 18 வகையான செயல்கள் நடைபெறுகின்றன. அதில் ஒன்றுதான் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டம். சென்னை மாவட்டத்தில் 10 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சேத்துப்பட்டு, கொருக்குப்பேட்டை, சூளை, பெரம்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், சி.ஐ.டி. நகர், இந்திரா நகர் போன்ற இடங்களில் 10 மண்டலங்கள் இயங்கி வருகின்றன. ஒரு மண்டலத்துக்கு 5 சிறப்புக் கல்வியாளர்களும், பிஸியோதெரபிஸ்ட் ஒருவரும் உள்ளனர். “இங்குள்ள மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி கற்பிக்கப்படுகிறது. பாட்டு, உடற்பயிற்சி, அடிப்படை எண்கள் மற்றும் வண்ணங்களைக் கண்டறியும் திறன், தங்கள் வீட்டு முகவரி, தொலைபேசி எண்கள், பெற்றோரின் பெயர், உத்தியோகம் போன்ற முக்கியத் தகவல்களை அறியப் பழக்குகிறோம். ஆண்டிற்கு ஒன்றிரண்டு முறை மருத்துவ முகாம்கள் நடத்தி, அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பகல் நேரப் பாதுகாப்பு பயிற்சி மையத்திற்கு வரும் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு, சுண்டல், பாதாம் பால், பிஸ்கெட் போன்ற சிற்றுண்டி, தினசரி ஏதேனும் ஒரு பழம் வழங்கப்படுகிறது. தினசரி இதைப் போன்ற சத்துணவு வழங்க, ஒவ்வொரு மண்டலத்திற்கும் அரசு மாதம் ரூ.7,000 ரூபாய் ஒதுக்குகிறது. அத்துடன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆட்டோவில் வந்து செல்ல வசதியாக ரூ.4,000 ஒதுக்குகிறது. அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க பயண அட்டை வழங்கப்படுகிறது. இந்த மாணவர்களுடன் துணைக்கு வரும் பாதுகாவலர் அல்லது பெற்றோர்களில் ஒருவருக்கும் இலவசப் பயண அட்டை வழங்கப்படுகிறது” என்கிறார்கள், ஐந்தாவது மண்டலத்தில் சிறப்புக் கல்வியாளர்களாக இருக்கும் தமிழ்ச்செல்வியும், பரிமளாவும். “எங்கள் மண்டலத்தைப் பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காதொலிக் கருவி, கண் கண்ணாடி, உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.7 லட்சத்தில் 9 குழந்தைகளுக்கு அறுவை செய்யப்பட்டது. தற்போது அக்குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளன. எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் மூலம் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. சாய்தளம் (Ramp) கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற குழந்தைகளுக்கு அரசு அளிக்கும் பல்வேறு நிதியுதவிகள், சலுகைகள் பெற சிறப்பு ஆசிரியர்கள் உதவுகிறார்கள்” என்கிறார், 5-வது மண்டலத்தின் மேற்பார்வையாளர் மகாலட்சுமி. மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் பலருக்கு இதுபோன்றதொரு பகல் நேரப் பாதுகாப்பு பயிற்சி மையங்கள் இருப்பதே தெரிவதில்லை. பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற துயரத்தில், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே வைத்துப் பாதுகாக்கிறார்கள். வெளியுலகத்தை அவர்களுக்கு காட்டும்போதுதான் தங்களது குறைபாடுகளை மறக்கவும், மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகவும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள், இங்குள்ள சிறப்புக் கல்வியாளர்கள். இதற்கென தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்களைச் சார்ந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைக் கண்டறிவதிலிருந்து, அக்குழந்தைகளின் பெற்றோர்களைச் சந்தித்து எஸ்.எஸ்.ஏ.வின் திட்டங்களை எடுத்துரைப்பதிலிருந்து, மத்திய, மாநில அரசின் உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அவர்களுக்குக் கிடைக்க உதவுகிறார்கள். “பகல் நேரப் பாதுகாப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க முடியாத அளவுக்கு உடல்நலக் குறைவு உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று உடலியக்க சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்கிறோம். பெற்றோர்களுக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். எங்களுடைய மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் இருக்கும் தெருவோரக் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க உதவுகிறோம். தொழில், வேலைவாய்ப்பு காரணமாக பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்க முடியாத குழந்தைகள், மாற்றுச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் கல்வி கற்க முடியாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்” என்கிறார், ஆசிரியர் பயிற்றுநர் ஷீலாகுமாரி. “மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற எஸ்.எஸ்.ஏ. செயல்படுத்தி வரும் திட்டங்களை தமிழகம் முழுவதிலுமுள்ள பெற்றோர்கள் பயன்படுத்திப் பயனடைய வேண்டும்” என்று கூறும் சிறப்புக் கல்வியாளர் தமிழ்ச்செல்வியின் வார்த்தைகளில் அக்குழந்தைகள் மீதான அக்கறை பளிச்சிடுகிறது. |
Monday, September 24, 2012
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் கல்வி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment