-->

Monday, September 24, 2012

பறப்பதற்கு கால்கள் தேவையில்லை!


அதிஷா

லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில்  இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கிரிஷா

வனுக்கு இடது கால்ல பிரச்சினைனு தெரிஞ்சப்போ எங்களுக்கு இடிவிழுந்தது போல இருந்தது. பெரியவனாகி இவன் என்ன ஆகப்போறானோனு ஒவ்வொரு நாளும் வருத்தப்படுவேன். டாக்டர்கள் ஆபரேஷன் செய்தா சரியாகலாம்னு சொன்னப்ப கூட ஏதோ பயத்தால வேண்டாம்னு மறுத்துட்டேன்.

அதுக்கான இன்னொரு காரணம் என்னோட வறுமை.  அன்றாடத் தேவைகளுக்கே போராட வேண்டிய சூழல்லதான் இவனை வளர்த்தேன். அவனுக்கு நான் எந்த உதவியையும் செய்ததில்லை. இருந்தும் அவனாகவே தன்னுடைய நம்பிக்கையால, விடாமுயற்சியால தன்னந்தனியா போராடி இன்னைக்கு என்னை மட்டுமில்ல, நம் ஒட்டுமொத்த  தேசத்தையும் பெருமைப்படுத்தியிருக்கான்.” நாகராஜே கௌடா பேசும்போதே கண்களில் கண்ணீர். அவருடைய மகன் கிரிஷா, இந்தியாவை தலைநிமிரச் செய்திருக்கிறார்.

சென்ற வாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து, லண்டனிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இதில் இந்தியாவுக்காக உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கிரிஷா! இந்த  பாராலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிற முதல் பதக்கம் இதுதான்!

லண்டனில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளுக்காக இந்தியாவிலிருந்து 10 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. இவர்களில் பலரும் தொடர்ந்து தோல்விகளைத் தழுவ, பதக்கப்பட்டியலில் இந்தியா இடம்பெறுமா என்பதே சந்தேகமா இருந்தது. இந்த முறை பதக்கமே கிடைக்காது என ஆருடம் சொல்லப்பட்டது. அனைத்தையும் பொய்யாக்கினார் கிரிஷா.

1988ம் ஆண்டு இந்தியக் குடியரசு தினத்தில் பிறந்தவரான கிரிஷா, ஹோசனாகரா நாகராஜே கௌடா இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு ஒலிம்பிக்கில் F42 க்ளாஸ் எனப்படும் பிரிவில் கைகள் அல்லது கால்களில் குறையுள்ளவர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தப் பிரிவின் உயரம் தாண்டுதலில்தான் இடதுகால் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளியான கிரிஷா கலந்துகொண்டார்.

“இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைக்குமானு தெரியாது. இதுதான் எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு. என்னுடைய வலிகள், வேதனைகள், பட்ட துயரங்கள் எதுவுமே நினைவுக்கு வரவில்லை. சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும்தான் அந்த நேரத்தில் மனது முழுக்க நிறைந்திருந்தது. இதுவரை தாண்டியதை விடவும் அதிகமாக... இன்னும் அதிகமாக என என்னுடைய ஒவ்வொரு அணுவும் சொல்லிக்கொண்டேயிருந்தன” என தன்னுடைய வெற்றி விநாடிகளைப் பற்றிச் சொல்கிறார் கிரிஷா. இறுதிப்போட்டியில் தன்னுடைய ஆல்டைம் பெஸ்ட் பர்ஃபார்மென்ஸினை வெளிக்காட்டினார். 1.74 மீட்டர் உயரத்தை அநாயசமாகத் தாண்டி அசத்தினார். நூலிழையில் தங்கப்பதக்கத்தை கவுண்ட் பேக்கில் தவற விட்டார்.

இந்த ஒலிம்பிக் பயிற்சிக்காகவே ஆறு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய வங்கிப்பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுமூச்சாகப் பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

“நான் ஒலிம்பிக்கிற்காகத் தயாராகும் போதுதான் மல்யுத்த வீரர் சுஷில்குமார் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதுதான் என்னை ஊக்கப்படுத்தியது. ஒரு மெடல் தருகிற உற்சாகம் வேறு எதுவுமே தந்துவிடாது!” என்கிறார் கிரிஷா.
 
சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதிருந்தே ஒரு கிரிக்கெட் வீரர் ஆகவேண்டும் என்பதுதான் கிரிஷாவின் கனவு.

நடக்கவே சிரமமாக இருந்தபோதும் முயற்சி செய்து நடந்தார். ஓடவே முடியாதபோதும் தட்டுத்தடுமாறி ஓடினார். உயரம் தாண்டிக்காட்டுகிறேன் பார் எனப் பறந்தார். பள்ளியில் சக மாணவர்களோடு (அவர்களுக்கு எந்தக் குறையும் கிடையாது!) போட்டிபோட்டு ஜெயிக்க ஆரம்பித்தார். இது கல்லூரியிலும் தொடர்ந்தது. தானாகவே பயிற்சி எடுத்து உடல்குறைபாடில்லாதவர்களோடு போட்டி போட்டு மெடல்களை குவிக்கத் தொடங்கினார். இருந்தும் ஒரு விளையாட்டு வீரனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே கிடைக்காமல் போராட்டமாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை.

ஆறு வருடங்களுக்கு முன்பு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றார். இனி எப்போதும் விளையாட்டுதான் என்று முடிவெடுத்தார். ஆனால் ஒருபக்கம் உடல்குறைபாடு, இன்னொரு பக்கம் விரட்டும் வறுமை. சகோதரியின் திருமணத்துக்காகவும் குடிசையாய் இருக்கிற வீட்டினை மண்சுவர் வைத்துக்கட்டவும் வங்கியில் கடன் வாங்கினார் அப்பா. ஆனால் அதனை அடைக்கமுடியாமல் திணறுகிறார். இந்த நிலையில் எங்கிருந்து விளையாடி வெற்றி பெற்று வீட்டைக் காப்பாற்றுவது. அப்பாவுக்குப் பாரமாக இருக்கிறோமோ என்று கருதியவர் ஹசனாகராவிலிருந்து பெங்களூருவுக்கு வேலை தேடிக் கிளம்பினார்.

சமர்த்தனம் டிரஸ்ட் என்னும் மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம் கிரிஷாவுக்குக் கைகொடுத்தது. விளையாட்டுப் போட்டிகளுக்கு உதவ முடியாவிட்டாலும் அவருக்குப் பயிற்சிகள் கொடுத்து அவரை ஒரு தனியார் வங்கியில் வேலைக்குச் சேர்த்துவிட்டது அந்த நிறுவனம். சுமாரான வருமானம் நிம்மதியான வாழ்க்கைதான் என்றாலும் கிரிஷாவின் விளையாட்டார்வம் அவரை விடவில்லை.

தன் வீட்டுக்கு அருகிலிருக்கிற மைதானத்தில் ஓய்வு நேரங்களிலெல்லாம் பயிற்சி. எங்கு போட்டிகள் நடந்தாலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டார். உள்ளூர் போட்டிகளில் கிடைத்த வெற்றி, மாநில அளவில், தேசிய அளவில் அவரை சாதனை படைக்க வைத்தது. இந்த ஆண்டு ஜனவரியில் குவைத்தில் நடந்த இன்டர்நேஷனல் மீட்டில் கலந்துகொண்டு பதக்கம் வென்றார். தேசிய விளையாட்டு அகாதெமி, கிரிஷா வீட்டுக் கதவைத் தட்டியது. பயிற்சி தரவும், வேண்டிய உதவிகள் செய்யவும் ரெடி என்றனர். ரஷ்யப் பயிற்சியாளர் எவ்ஜினி நிகிதனும் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை ஷகானா குமாரியும் முழுவீச்சில் பயிற்சி கொடுத்தனர். அடுத்து, ஏப்ரலில் மீண்டும் மலேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான  சர்வதேசப் போட்டியில் இன்னொரு பதக்கம். இவருடைய பதக்க வேட்டை இதோ இப்போது ஒலிம்பிக்கில் வந்து நிற்கிறது.

“இந்த முறை தவறவிட்ட தங்கத்தை அடுத்தமுறை பிரேசிலில் வாங்கித் தருவேன்... டோண்ட் வொர்ரி!” என்று நம்பிக்கையோடு பேசுகிறார் கிரிஷா!  கர்நாடகாவே கிரிஷாவை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறது. கர்நாடக மாநில அரசு பத்து லட்ச ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்தவண்ணமுள்ளன! ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய விளையாட்டுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பூஸ்ட் கிரிஷா!
Download As PDF

No comments:

Post a Comment