-->

Monday, September 24, 2012

குடியால் அழியுமா பதிவுலகம்? பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

சென்னையில் நடக்கும் பதிவர் மாநாடு குறித்த கலந்துரையாடலின் நடுவே குடிப்பழக்கம் குறித்த சர்ச்சையும் முதன்மை இடத்தை பிடித்ததை அண்மையில் காண முடிந்தது.

முதலில் மனிதாபிமானி "பதிவர் சந்திப்புகள் டாஸ்மாக் பிசினஸ்சை உயர்த்தும் இடங்களா?" எனும் பதிவில், "பதிவர் சந்திப்புக்கு தண்ணி அடிச்சிட்டு வருவாங்க" என்றும், "எதார்த்தமாக பேசுவது போன்று குடியை அடுத்த தலைமுறையிடம் ஊக்குவிக்கும் செயல்களை பதிவுலகம் நிறுத்தவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டது.

சங்கவி "பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையா??? தேவையே !! தேவையே !!" எனும் பதிவில் "முந்தைய நாள் இரவு வந்து விட்டால் நண்பர்களோடு சேர்ந்து சரக்கு அடித்தே ஆக வேண்டும் இது தான் பதிவுலகில் எழுதப்படாத விதி என்று நினைக்கிறேன்" என்றார்.

 'மதம் மற்றும் குடி' தொடர்பான பொருளில், 
கே.ஆர்.பி.செந்தில் "சென்னை பதிவர் சந்திப்பு ...,
அஞ்சா சிங்கம் "மதுவா ...மதமா ...எதில் போதை அதிகம் .?"
கோவி.கண்ணன் "கு_கா_ன் பே_சு வி_ஞ்_ப் போ_சு !" ,
ரிலாக்ஸ் ப்ளீஸ் "பதிவர்சந்திப்பில் மதுவும் வேணாம், மதமும் வேணாம்!",  
இக்பால் செல்வன் "தமிழ் பதிவர் சந்திப்பைப் புறக்கணிப்போம்"  ஆகியோர் எழுதினர்.

அதிரடி ஹாஜா "சென்னை பதிவர் சந்திப்பினால் என்ன லாபம்?!" எனும் பதிவில் "குடியை ஆதரித்து ஜாலிக்காக கூட பதிவு எழுதவோ பேசவோ வேண்டாம் என ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம் போடலாம்..." என்றார். கடைசியில் மதுமதி "சென்னை பதிவர் சந்திப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு" எனும் பதிவு "மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்" என்று தெளிவுபடுத்தியது.
இதுபோல பல பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. இந்த விவாதம் அல்லது சலசலப்பு தேவையா? தேவையற்றதா? என்கிற மற்றுமொரு சர்ச்சைக்குள் நான் புக விரும்பவில்லை. அதே நேரத்தில் "குடிப்பழக்கத்தை விவாதிப்பது" குறித்து சில பொதுவான கருத்துகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

1. பதிவர்கள் குடிக்கலாமா?

சட்டபூர்வமாக குடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த உரிமை பதிவர்களுக்கும் உண்டு. எனவே, தமிழ்நாட்டில் 21 வயதுக்கு மேலுள்ள பதிவர்கள் குடிக்கலாம் (அதுதான் அனுமதிக்கப்பட்ட வயது).

ஆனால், இந்த உரிமை கட்டுப்பாடற்ற உரிமை அல்ல. எந்த ஒரு நபரும் தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கிழைக்கும் அளவுக்கு குடிப்பதற்கு உரிமை இல்லை. இதனை உலக சுகாதார நிறுவனம் தீங்கிழைக்கும் குடிப்பழக்கம் எனக் குறிப்பிடுகிறது.
2. குடித்துவிட்டு கூட்டங்களுக்கு செல்லலாமா?

குடித்துவிட்டு பொது இடங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னையின் பெரிய திரையரங்குகளில் குடித்துவிட்டு வருவோர் அனுமதிக்கப்படுவது இல்லை.

அவ்வாறே குடித்துவிட்டு பணிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய கொடிய குற்றம்.

3. மதம் ஒரு போதையா?

மதம் மட்டுமல்ல. அதுபோன்று எண்ணற்ற போதைகள் இருக்கின்றன. பாசம், காதல், யோகாசனம், நடனம், கொண்டாட்டம், திருவிழாக்கள், ரசிகர் மன்றம், அரசியல் கட்சிகள், விளையாட்டு என எல்லாமும் ஒவ்வொரு விதத்தில் போதைதான்.

இந்தப் போதையை எந்த ஒரு பொருளும் தூண்டுவது இல்லை, அதனால் உடலுறுப்புகள் சேதமடைவதும் இல்லை. மாறாக, ஆட்டம், கொண்டாட்டம், யோகாசனம் பொன்ற மதம் சார்ந்த அல்லது மதம் சாராத நடவடிக்கைகள் உடலுக்கு நல்லதுதான்.

குடிமயக்கம் எனப்படும் மதுபானப் போதை இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மனிதனின் மய்ய நரம்புமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், இப்போதை பன்னாட்டு நோய்வரையறைப் பட்டியலில் ஒரு மருத்துவ நோய்க்குறியீடாக (ICD - 10) குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குடிகாரர்கள் குடிநோயர்களாவர். மதவாதிகள் மதநோயர்கள் அல்ல.
4. மதத்தை ஆதரிப்போருக்கு குடியை எதிர்க்க தகுதி உண்டா?

தாராளமாக உண்டு. குடிப்பழக்கம் மட்டுமல்ல, வேறு எந்த ஒரு சமூக கேட்டையும் யார் வேண்டுமானாலும் எதிர்த்துப் பேசலாம். சனநாயக அமைப்பில் கருத்து சொல்வதும், கேள்வி கேட்பதும் அடிப்படையானவை (ஆனாலும், இதற்கெல்லாம் வரம்பும் உண்டு).

எந்த ஒரு நபரையும் அவரது மதத்தைக் கைவிடுமாறோ, அல்லது அந்த மதத்தில் உள்ள குறைபாடுகளை எதிர்க்குமாறோ கட்டாயப்படுத்த முடியாது. மதம் என்பது ஒரு அடிப்படைக் கலாச்சார உரிமை. அது அவரவர் தனிப்பட்ட விடயம். அதில் மற்றவர்கள் மூக்கை நுழைக்க முடியாது.

எனவே, மதுவின் கேடுகளை எதிர்க்க மதம் ஒரு தடை அல்ல.

5. மதம் குடியை ஒழிக்குமா?

மதத்திற்கும் குடிப்பழக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை. மதம் பலவிதமான கட்டுப்பாடுகளை அதை பின்பற்றுபவர்கள் மீது சுமத்துகிறது. அதில் மது ஒழிப்பும் ஒரு அங்கமாக சில மதங்களில் இருக்கிறது. குறிப்பாக இஸ்லாம், பவுத்தம், கிறித்தவம், சீக்கிய மதம் ஆகியன மதுவை எதிர்க்கின்றன.

ஆனால், உலக சுகாதார நிறுவனம் முன்வைக்கும் மது ஒழிப்புக்கொள்கையில் மதங்களுக்கு ஒரு இடமும் கிடையாது. உலகளாவிய மது ஒழிப்புக் கொள்கை என்பது அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலானது. இதில் மதங்களுக்கோ, இதர நம்பிக்கைகளுக்கோ இடம் இல்லை.

எனவே, வள்ளலார் சொன்னார், வள்ளுவர் சொன்னார் என்பதற்காகவெல்லாம் அரசின் கோள்கை உருவாக்கப்படக் கூடாது. அரசின் கொள்கை என்பது அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். மதம் அல்லது நம்பிக்கை என்பதற்காக - ஆதாரமற்றதை ஏற்பதோ, ஆதாரமுள்ளதைப் புறக்கணிப்பதோ ஜனநாயக அரசுகளின் வேலை இல்லை.
6. குடிப்பவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?

கூடாது. எப்படி எந்த ஒரு மனிதரையும் அவரது மதம், சாதி, இனம், பால் என்கிற அடிப்படையில் ஒதுக்கக் கூடாதோ, அதே போன்று குடிகாரர் என்பதற்காக எவரையும் ஒதுக்கிவைக்கக் கூடாது. இது மனிதஉரிமைக்கு எதிரானதாகும். எனவே, வேலைவாய்ப்பு, பொது இடம் என எதிலும் குடிகாரர் என்பதற்காக ஒருவரையும் ஒதுக்கக் கூடாது.

(இந்த இடத்தில் குடிகாரர் என்பதற்கும் குடித்துவிட்டு வருபவர் என்பதற்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவும். குடிகாரர் = குடிப்பழக்கம் உள்ளவர் அல்லது குடிநோயர். குடித்துவிட்டு வருபவர் = அந்த நேரத்தில் குடித்திருப்பவர். பொது இடத்திற்கு குடிகாரர் வரலாம், ஆனால், குடித்துவிட்டு வரக்கூடாது).

7. குடிப்பவர் நல்லவர், ஆனால் குடிப்பழக்கம் தவறு என்பது முரண்பாடாக இல்லையா?

முரண்பாடாக இல்லை.குடிப்பவர்கள் அல்லது குடிநோயர்கள் என்கிற நிலையை எட்டியவர்கள் மதுவுக்கு பலியான அப்பாவிகளாகவே கருதப்பட வேண்டும். அவர்களது இந்த இந்தநிலைக்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது. உண்மையானக் குற்றவாளிகள் என்போர் குடியைத் திணிக்கும் மதுபான நிறுவனங்களும், அதனைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கமும்தான். இதில் குடிப்பவரின் பங்கு பெரிதல்ல, முக்கியமானதும் அல்ல.

தனிமனிதர்கள் மனம் திருந்துவதால் மது ஒழியாது. அதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மதுவை ஒழிக்காது. மாறாக, அரசாங்கம் 'ஒருங்கிணைந்த கொள்கை' செயல்பாட்டின் மூலமாக இந்த தீமையை ஒழிக்க  வேண்டும். (ஒருங்கிணைந்த மதுஒழிப்பு கொள்கைக்கான வழிகாட்டியை இங்கே காண்க: "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" 
(WHO Global Strategy to Reduce Harmful Use of Alcohol) 
8. குடிப்பழக்கத்தைப் பற்றி பதிவுகளில் எழுதலாமா?

எழுதலாம். ஆனால், எப்படி? என்ன நோக்கத்தில்? எழுதப்படுகிறது என்பது முக்கியமாகும். இந்தியாவில் மதுபான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதன் நோக்கம் குடிப்பழக்கத்தை கவர்ச்சிகரமாகவோ, இயல்பானதாகவோ காட்டக்கூடாது என்பதுதான். அப்படிக் காட்டினால அதுவும் விளம்பரம்தான். இதனால்தான் திரைப்படங்களில் குடிக்கும் காட்சிகள் வரும்போது அதுகுறித்த எச்சரிக்கையும் வெளியிடப்படுகிறது.

எனவே, குடிப்பழக்கத்தை அது ஒரு சாதாரண பழக்கம் என்பது போலவோ, கவர்ச்சிகரமானது என்பதாகவோ எழுதக் கூடாது. 

திரப்படத்திற்கு சென்றது, கடைக்கு சென்றது, சுற்றுலா சென்றது - என்பது குறித்தெல்லாம் 'நன்றாக' எழுதுவது போன்று குடியைப் பற்றி 'நன்றாக' எழுதக்கூடாது. இந்த வேறுபாடு 'பொறுப்புள்ள மனிதர்கள்' என்கிற அடிப்படையில் பதிவர்களுக்கு உண்டு.

9. குடிப்பழக்கம் இதயத்திற்கு நல்லதா?

நிச்சயமாக இல்லை. மிகச்சிறிய அளவாகக் குடிப்பதால் இதயத்திற்கு நன்மை என்று கூறப்பட்டது. அந்த நிலை இப்போது இல்லை. ஒருநாளில் ஒட்டுமொத்தமாக 30 கிராம் அளவுக்கு கீழாகக் குடிப்பது மட்டுமே குறைவானக் குடி எனப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட எந்த வளரும் நாட்டிலும் இப்படி மிகக்குறைவாகக் குடிக்கும் பழக்கம் இல்லை. எனவே, குடிப்பழக்கம் என்றாலே அது அதிகமாகக் குடிப்பதைதான் குறிப்பிடுகிறது. 

குடிப்பழக்கம் இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. குடியால் ஏற்படும் மரணங்களில் 22% இதயம் பாதிப்பதால் நேர்கிறது. எனவே, குடிப்பழக்கம் இதயத்திற்கு நல்லது என்பது ஒரு கட்டுக்கதையாகும்.

10. தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?

உலகிலேயே மதுவைத் திணிக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசுதான். 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு மதுவால் கிடைத்த வருமானம் 2,800 கோடி ரூபாய். இப்போது 18,000 கோடி ரூபாய். அடுத்த ஆண்டு இது 21,000 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வருவாயில் மதுபான வருவாய் மட்டும் 30% ஆகும்.

உலகிலேயே அதிக சாலை விபத்து நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிக விபத்து நிகழும் மாநிலம் தமிழ்நாடு. 60% சாலை விபத்திற்கு குடிப்பழக்கம் காரணம். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 66,300 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் மட்டும் விபத்தில் இறந்துள்ளனர். இதில் குடிக்காதோரும் அடக்கம்.

இந்தியாவிலேயே, விதவைகள் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. மக்கள் தொகையில் 9% பேர் விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள். இதற்கும் குடியே முதன்மைக் காரணம். தமிழ்நாட்டில் தந்தையின் குடியால் 5 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ளனர். 

உலகிலேயே அதிக தற்கொலை நடக்கும் நாடு இந்தியா, இந்தியாவில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தற்கொலைக்கும் குடிப்பழக்கம் முதன்மைக் காரணமாகும்.

எனவே, தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் குடிப்பழக்கத்தைக் கற்றிருக்கலாம். 21 வயதைக் கடந்தவர்கள் இப்போதும் அளவுடன் குடிக்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், குடிப்பவரானாலும் குடிக்காதவரானாலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பதே நியாயம் ஆகும்.

இன்று பள்ளிக்கு செல்லும் என்னுடைய மகன் எதிர்காலத்தில் குடிகாரனாக ஆவதை நான் நிச்சயம் விரும்பவில்லை. எந்த ஒரு பதிவரும் தனது சந்ததியினர் குடிக்கு அடிமையாவதை விரும்பமாட்டார் என்றே கருதுகிறேன். இதிலும்கூட விதிவிலக்கானவர்கள் இருக்க வாய்ப்பு இல்லை!
Download As PDF

No comments:

Post a Comment