சர்வதேச விண்வெளி நிலையத்தின் விநியோக யூனிட்டில் சிக்கியிருந்த உலோகத்
துகள்களை சுனிதாவும் ஹோஷிடேவும் டூத் பிரஷ் உதவியுடன் அகற்றியுள்ளார்கள்.
பற்களைத் துலக்க
உதவும் டூத் பிரஷைக் கொண்டு, ஆகாயத்தில் ஆகா எனப் பாராட்டும்படி ஒரு
சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள், விண்வெளியில் இருக்கும் நாசா விண்வெளி
வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானிய விண்வெளி வீரர் அக்கிஹிகோ
ஹோஷிடே.
இருவரும் ஊதா நிற டூத் பிரஷ் உதவியுடன் சர்வதேச விண்வெளி மையத்தில் (international space station - ISS) உள்ள பிரதான மின் விநியோக யூனிட்டில் ஏற்பட்ட ஒரு கோளாறை சரி செய்துள்ளனர்.
சென்ற வாரம் நாசா விண்வெளி நிலையத்தின்
பொறியாளர்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்கள்
இணைந்து மின் விநியோக யூனிட்டின் சுவிட்ச் போர்டில் சிக்கியிருந்த உலோகத்
துகள்களை சுத்தம் செய்ய செய்த முயற்சி தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்தே
சுனிதாவும் ஹோ ஷிடேவும் டூத் பிரஷ் உதவியுடன் துகள்களை அகற்றியுள்ளார்கள்.
ரிப்பேர் ஆன இடத்தில் மாட்டியிருந்த போல்ட்டை அதிகப்படியான கிரீஸ் தடவி
கூடுதல் அழுத்தம் கொடுத்து அதை வெளியில் எடுத்துள்ளார்கள்.
மேலும் இந்தக் கோளாறைச் சரிசெய்யச் சென்ற
இரண்டு நாட்களில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டாவது முறையாக
விண்வெளியில் 6 மணி நேரம் 28 நிமிடங்கள் நடந்து சாதனை செய்திருக்கிறார்கள்
இந்த இருவரும். கூடவே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் ரோபோவின்
கைகளில் ஒரு கேமராவையும் பொருத்தியுள்ளார்கள்.இதுவரை நடைபோட்ட கணக்குப்படி,
ஆறாவது முறை நடந்ததன் மூலம் மொத்தமாக 44 மணி நேரம் 2 நிமிடங்கள்
விண்வெளியில் நடந்து, பெக்கி ஒயிட்சன் விண்வெளியில் ஆறு முறை நடந்த (39 மணி
நேரம் 46 நிமிடங்கள்) சாதனையை முறியடித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.
இந்த உலக சாதனைக்காக தன்னைப் பாராட்டிய ஒயிட்சன்னுக்கு அளித்த பதிலில்,
‘வாய்ப்புக் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் இதைச் செய்ய முடியும்’ என்று
அடக்கமாகப் பதில் சொல்லியுள்ளார் சுனிதா.
அதிக நாட்கள் விண்வெளியில் (195 நாட்கள்)
தங்கியிருந்த விண்வெளி வீராங்கனை என்ற பெருமையும் சுனிதாவிற்கு உண்டு.
2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி விண்வெளிக்கு முதலில் சென்ற சுனிதா, 2007
ஜூன் மாதம் பூமி திரும்பினார். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்தவர்,
குஜராத்தில் உள்ள தன் குடும்பத்தினரை சந்தித்தார். நாடு முழுவதிலும் உள்ள
பள்ளிக் குழந்தைகளையும் சந்தித்துப் பேசினார். மீண்டும் கடந்த ஜூலை 14ம்
தேதி விண்வெளிக்குச் சென்று, வருகிற நவம்பர் 2வது வாரம் பூமிக்குத் திரும்ப
உள்ளார், ஆகாயத்தில் அசகாயச் சாதனை நிகழ்த்துகிற சுனிதா!
விண்வெளி வாழ்க்கை எப்படி இருக்கும்?
கோடிக்கணக்கான
மைல்கள் உயரத்தில் மாதக்கணக்கில் விண்வெளி நிலையத்தில் இருந்து ஆராய்ச்சி
செய்யும் ஆராய்ச்சியாளர்கள் தினப்படி வேலைகளை எப்படிச் செய்கிறார்கள்
என்பது செம திரில்லான சந்தேகம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட
வீடியோ காட்சி இந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்துள்ளது.
தினப்படி வாழ்க்கை, நாம் பூமியில்
இருப்பதைப் போல அத்தனை சுலபமானது இல்லை. எத்தனை நாட்கள் இருந்தாலும்
குளிக்க முடியாது. சர்வதேச விண்வெளி நிலையம் மொத்தமும் மின்சாதனப்
பொருட்களால் நிரம்பி இருப்பதால் தண்ணீரை மிகக் கவனமாகப் பயன்படுத்த
வேண்டும். அங்கே நீர், ஆபத்தான ஒன்று. இங்கே வாளி வாளியாகப் பயன்படுத்துவது
போல அங்கு முடியாது. சொட்டு சொட்டாகத்தான் உபயோகிக்க வேண்டும். மசாஜ் ஹாட்
பேக் அளவில் ஆளுக்கு ஒரு பை நீர்தான். அதைத்தான் மாதக்கணக்கில் பயன்படுத்த
முடியும். இந்தப் பையிலிருந்து நீரை ஊற்றும்போது புவியீர்ப்பு விசை
இல்லாததால் குமிழியாக நீர் வருகிறது.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, ஒருவர்
பயன்படுத்தக் கூடிய அளவில் பாத்ரூம் உள்ளது. தவிர, பொதுவான உடற்பயிற்சிக்
கூடம், டைனிங் ஹால் உள்ளன. காலையில் டிஷ்யு பேப்பர் அளவில் இருக்கும்
மெல்லிய துணியை சில துளி நீரால் நனைத்து, உடல் மொத்தமும் துடைத்துக்
கொள்கிறார்கள். தினமும் நாம் வீட்டில் பயன்படுத்தும் பேஸ்ட்டில் 100ல் ஒரு
பங்குதான் பல் துலக்க எடுக்க வேண்டும். வாய் கொப்பளிக்க எல்லாம் முடியாது.
பேஸ்ட் நுரையை அப்படியே இன்னொரு டிஷ்யு துணியில் துப்பி விட வேண்டும்.
பாத்ரூமைப் பயன்படுத்திய பின்பும் முடிந்த
வரை தண்ணீரைப் பயன்படுத்தாமல் டிஷ்யு துணியால் சுத்தம் செய்துகொள்ள
வேண்டியதுதான். குறைந்தது வாரத்திற்கு 2 முறை உடற்பயிற்சி செய்கிறார்கள்.
மிக மெதுவாக நிதானமாகவே உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை நாம்
எழுந்திருக்கும்போது, நடந்தால், கனமான பொருட்களைத் தூக்கினால் என நம்
தசைகள் புவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்படுவதால் எலும்புகள்
வலிமையாகின்றன. பூமியில் எவ்வளவு அதிகமாக, வேகமாக உடல் உழைப்பு இருக்கிறதோ
அவ்வளவுக்கு ஆரோக்கியம் இருக்கும்.
ஆனால் விண்வெளியில் புவியீர்ப்பு விசை
இல்லாததால் விண்வெளி வீரர்கள் புவியீர்ப்பு விசையைவிட லட்சம் மடங்கு அதிக
வலுவான மைக்ரோ கிராவிட்டி எனப்படும் நுண் விசையை உணர்கிறார்கள்.
விண்வெளிக்குச் சென்றவுடன் இந்தச் சூழலை நம் உடம்பு ஏற்றுக்கொள்ளும்.
இதனால் அதிக வலுவுள்ள எதையும் எலும்புகளால் தாங்க முடியாது. எனவே மிக
நிதானமாகவே உடற்பயிற்சி செய்கிறார்கள்.
|
No comments:
Post a Comment