என். ஹரிபிரசாத்
உரிமையை அடைய வேண்டுமானால் போராடக் கற்றுக் கொள்ளுங்கள், பெண்களிடம் மோதுபவர்கள் நொறுங்கிப் போவார்கள் சம்பத்பால் தேவிக்கு பன்னிரெண்டு வயதில் திருமணம். 13 வயதில் முதல் குழந்தைக்குத் தாயானார். அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளுக்குத் தாயான சம்பத்பால் தேவி, ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்ட காட்சி பதைபதைக்க வைத்தது. ஓர் ஆண், தன் மனைவியை கண்மூடித்தனமாக அடித்துக் கொண்டிருந்தான். பார்த்தவுடன் சம்பத்பால் தேவிக்குத் தாங்கவில்லை. அந்த ஆணிடமிருந்து அடிபட்ட பெண்ணைக் காப்பாற்ற செயலில் இறங்கினார். எவ்வளவோ போராடியும் அதைத் தடுக்க சம்பத்பால் தேவியால் முடியவில்லை. ஒரு பெண்ணை இப்படி இம்சிக்கிறானே, தன் கண் முன்னால் நடந்ததைத் தடுக்க முடியவில்லையே என்ற இயலாமை அவருக்குள் கடுங்கோபமாக மாறியது. அடுத்த நாள் பொங்கி எழுந்த சம்பத்பால் தேவி, தன்னுடன் ஐந்து பெண்களை அழைத்துக்கொண்டு கையில் கம்புகளுடன் சென்றார். மனைவியை அடித்த அந்த நபரைத் தேடிப்பிடித்து, கம்புகளால் அடித்துப் புரட்டி எடுத்தார். இந்தச் செய்தி அருகிலுள்ள ஊர்களுக்குப் பரவியது. பெண்கள் மத்தியில் இது மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தடுக்காமல் விடக்கூடாது என்று முழங்கினார்கள் அந்தப் பெண்கள். அப்படி ஆரம்பமானதுதான் குலாபி கேங். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தட்டிக் கேட்பதற்காக ஆரம்பித்திருந்தாலும் பிற்படுத்தப்பட்டஇனத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்காக, அவரைத் துன்புறுத்திய காவல்நிலையத்தை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள் குலாபி கேங் பெண்கள். இதற்காக தங்கள் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு கம்புகளை எப்படிக் கையாள வேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள். ‘யாராக இருந்தாலும் உரிமையை அடைய வேண்டுமானால் போராடக் கற்றுக் கொள்ளுங்கள், பெண்களிடம் மோதுபவர்கள் நொறுங்கிப்போவார்கள், புதிய சுதந்திரம் பெறுவோம்’ - இதுதான் குலாபி கேங் பெண்கள் அமைப்பின் முழக்கம். இது எங்கோ இருக்கிற அமைப்பு என்று நினைத்து விடாதீர்கள். வறட்சி, ஜாதிப் பிளவுகள், பெண் கல்வியறிவின்மை, குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை என்று எக்கச்சக்க பிரச்சினைகளின் பிடியில் சிக்கியிருக்கிற உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பண்டா மாவட்டத்தில்தான் குலாபி கேங் உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை, அரசு இயந்திரங்களின் அலட்சியம், ஊழல் என்று பிரச்சினை எதுவாக இருந்தாலும் தீர்வைக் காண்கிறது கைகளில் கம்புகளை ஏந்தி, இளஞ்சிவப்பு நிறப் புடவைகள் அணிந்து போராடும் இந்தப் பெண்கள் குழு. அதனால் தான் ஒடுக்கப்படுகிறஆண்களும் இவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் போராடுகிறார்கள். குலாபி கேங் பற்றி சம்பத்பால் தேவி கூறும்போது, “எங்களின் பிரச்சினைகளுக்கு யாருமே உதவிக்கு வருவதில்லை. அதிகாரிகளும் காவல்துறையும் ஊழலில் ஊறியவர்களாகவும் ஏழைகளுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு எதிரானவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு உடனடி நீதி வேண்டியும் தவறு செய்பவர்களை உணரவைக்கவும் சட்டத்தை நாங்களே கையில் எடுத்துக் கொண்டோம்” என்கிறார். பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு கைவினைப்பொருட்கள் செய்யும் பயிற்சியையும் இந்த அமைப்பின் மூலம் கற்றுத்தருகின்றனர். 20 ஆயிரம் உறுப்பினர்களுள்ள குலாபி கேங்கிற்கு பாரிஸ் நகரத்திலும் ஒரு கிளை உள்ளது என்பதுதான் ஆச்சரியம். |
Monday, September 24, 2012
கம்புகளை எடுத்தோம்...கண்ணீரைத் துடைத்தோம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment