-->

Saturday, December 29, 2012

குழந்தைகளும், விஷமத் தொலைக்காட்சிகளும்...

சென்ற ஞாயிறு சன் தொலைக்காட்சியில் "குட்டிச் சுட்டீஸ்" நிகழ்ச்சியை காண நேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்களில் குழந்தை நிகழ்ச்சி நடத்துவோருக்கு மட்டுமல்ல - பெரும்பாலும் எந்த நிகழ்ச்சி நடத்துவோருக்கும் சமூக அறிவும், சமூக பொறுப்புணர்சியும் இல்லை என்பதையே அவர்கள் கேட்கிற கேள்விகள் நிருபித்து கொண்டே வருகிறது. சென்ற ஞாயிறு - குழந்தைகளுக்கான அந்த நிகழ்ச்சியை நடத்திய இமான் - பல அபத்தமான கேள்விகளுடன் இந்த கேள்வியை கேட்டார் - ஒரு ஐந்து வயது குழந்தையுடம்.

"லவ்'ன்னு சொல்றாங்களே. அந்த லவ்வுனா என்ன" என்று. குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கேட்க வேண்டிய கேள்வி தானா? "காலேஜ்க்கு போவாங்கல... அவங்க அப்புறம் அப்பா அம்மாகிட்ட சொல்லி கல்யாணம் பண்ணிக்க கேட்பாங்க" என்று தனக்கு தெரிந்த பதிலை சொன்னது. குழந்தைகள் எது சொன்னாலும், எது செய்தாலும் அழகு தான். ரசிக்கலாம் தான். அதிகப்பிரசங்கித்தனமாக பேசினாலும் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து மனது சந்தோஷப்படும் தான்.

அதற்காக வயதுக்கு மீறின கேள்வியை கேட்பதில் எந்த நேர்மையும் இல்லை. அந்த கேள்வியை கேட்காவிட்டால் அந்த நிகழ்ச்சி சிறக்காதா? ஆபாசமான பாடல்களுக்கு குழந்தைகளை ஆட வைப்பது. அபத்தமான கேள்விகள் கேட்பது என்று குழந்தைகளை வயதுக்கு மீறின விஷயங்களை செய்ய தூண்டும் செயல்பாடுகளை தொலைக்காட்சிகள் தவிர்ப்பது நல்லது. இது குறித்து மத்திய ஊடக ஒளிபரப்பு திட்ட கவுன்சிலிங் என்கிற அமைப்பு என்ன கூறுகிறது என்று பார்ப்போமா.

"குழந்தைகளை வயது வந்தவர்கள் போல சித்தரித்து தொலைகாட்சி ஊடகங்களில் காண்பிப்பது குற்றம்" என்று சொல்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க இப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா என்ன? மேலும் அந்த கவுன்சிலிங் அமைப்பு கூறியிருப்பதாவது, "குழந்தைகளைப் பெரியவர்கள் போல சித்தரித்து நெடும் தொடர் எடுப்பது, காதல் பாடல்களுக்கு, குத்துப் பாடல்களுக்கு நடனமாட விடுவது, காதல் பாடல்களை பாட சொல்வது என்பதெல்லாம் குற்றம் என்றும் ரியாலிட்டி ஷோக்கள் என்கிற பெயரில் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் வகையில் நடுவர்கள் பேசுவது மிகவும் தவறான செயல்.

 இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை இனி நடத்தவே கூடாது என்றும் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவிக்கிறது. இந்த அமைப்பு நாட்டின் அனைத்து ஒளிபரப்பு ஊடகத்துறை சார்பான அமைப்பு என்பது குறிப்பிடத் தக்கது. வரவேற்தக்க முடிவு தான். நாட்டில் ஒவ்வொரு செயல்பாட்டை கண்காணிக்கவும் ஒரு அமைப்பு இருந்து கவுன்சிலிங் செய்தாலும், அது பெயரளவுக்கு தான் இருக்கிறதே ஒழிய முழுமையாக செயல்படவில்லை என்பதே உண்மை.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்  குழந்தைகள்  மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பல சம்பவங்கள் நிருபிக்கின்றன. ரியலிட்டி ஷோவில் தோற்ற மாணவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான். மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகள் - நல்ல விஷயங்களை விட ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களையே நிறைய கற்று தருகின்றன. சில தினங்களுக்கு முன் தினசரி ஒன்றில் வாசித்த செய்தி.

பதினொரு வயது சிறுமி, ஏதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்த பாதிப்பில் தன் உடம்பிற்கு தீ வைத்திருக்கிறார். சற்று நேரத்தில் அந்த சிறுமி பரிதாபமாய் இறந்துவிட்டது. இது அறியா குழந்தை மனதில் ஏற்பட்ட தாக்கம். வயது வந்தவர்கள் மனதிலும் நஞ்சை தூவும் வேலையை செய்கிறதே சில தொடர்கள். நான் எந்த தொடரையும் பார்ப்பதில்லை. ஆனால் எப்போதாவது தொடர்கள் பக்கம் போனால் - இந்த காட்சிகள் வர தவறுவதில்லை.

அது - எந்த பெண்ணுக்காவது அவரின் சினேகிதர்கள் - குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, அந்த பெண்ணை கெடுக்க முனைவது. அதை ஆபாசமாக படம் பிடிப்பது. இதை பார்க்கிற ஒருவனுக்கு இதே புத்தி வராது என்பதற்கு என்ன நிச்சயம்.​குழந்தைகளின் அருகிலேயே இருந்து - அவர்கள் என்ன நிகழ்ச்சி பார்க்கிறார்கள் என்று பார்த்து கொண்டே இருக்க முடியாது. குழந்தைகளிடம் இருந்து ஆபாச காட்சிகளை மறைக்க பாடுபட வேண்டி உள்ளது.

கூடிய மட்டும் குழந்தைகளுக்கென கார்ட்டூன் மற்றும் நகைச்சுவை சேனல்கள் என்று செட் செய்து வைத்தாலும் - ​நல்ல நிகழ்ச்சியினுடேயும் விளம்பரங்கள் வக்ரமானதாய் உள்ளது. இன்றைக்கு நாட்டில் நிகழும் அனேக அவலங்களுக்கு முதற் காரணமாக தொலைக்காட்சி ஊடகங்களே இருக்கின்றன என்பதை உணர்ந்து - தங்கள் பணியினை பொறுப்புணர்ந்து ஊடகங்கள் மேற் கொண்டால் மிக நல்லது.
Download As PDF

No comments:

Post a Comment