-->

Saturday, December 29, 2012

தமிழ் சினிமாவும் மலிவாகிவிட்ட டாக்டரேட்டுக்களும்!

தமிழ் சினிமா வரலாற்றில் பல கௌரவ டாக்டர்கள் உள்ளனர். குறிப்பாக டாக்டர்.சிவாஜி கணேஷன், டாக்டர்.பானுமதி, டாக்டர்.சரோஜா தேவி, டாக்டர்.கே.பாலச்சந்தர், டாக்டர்.எம்.எஸ் விஸ்வநாதன், டாக்டர்.இளையராஜா, டாக்டர்.எஸ்.பி பாலசுப்ரமணியம், டாக்டர். கே.ஜே. யேசுதாஸ் ,  டாக்டர். கமல்ஹாசன் போன்றோர் சினிமாவில் ஆற்றிய சேவைகளுக்காகவும் டாக்டர். எம்.ஜி.ஆர், டாக்டர். ஜெயலலிதா, டாக்டர். கருணாநிதி போன்றோர் சினிமாவை விட்டு வெளியேறிய பின் சமூக அரசியல் சேவைகளுக்காகவும் கௌரவ  டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளனர். அதேபோல சமீபகாலத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் இளையதளபதி விஜய், இயக்குனர் ஷங்கர் இருவருக்கும், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் புரட்சித்தமிழன் சத்யராஜ், இளைய திலகம் பிரபு, தேனிசை தென்றல் தேவா , கங்கை அமரன் ஆகியோருக்கும் , இத்தாலிய மிலான் பல்கலைக்கழகம் சீயான் விக்ரமிற்கும், ஐ.ஐ.சி.எம் பல்கலைக்கழகம்  புரட்சிக்கலைஞர்  விஜயகாந்திற்கும்  டாக்டரேட் பட்டங்கள் வழங்கியுள்ளன. மேலும் சமீபத்தில் இசைபுயல் ஏ.ஆர் ரஹ்மான் தனது நான்காவது டாக்டரேட் பட்டதை அமெரிக்க மியாமி பலகலைகழகத்திடமிருந்து பெற்றார்.
சரி இப்போ விசயத்துக்கு வருவோம். இவர்கள் எல்லாருமே இந்த கௌரவ  டாக்டரேட் பட்டதை பெறுவதற்கு உண்மையிலேயே தகுதி உடையவர்களா? என ஒரு கேள்வி அடிக்கடி நமக்கு வந்துட்டு போகும். அதுலயும் மேற்சொன்ன எல்லாரையும் பொதுவாக சொல்ல முடியாது, ஏன்னா  சிலர் உண்மைலேயே  கலைத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்றோரின்  நடிப்புலக சாதனைகளும் , எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான் போன்றோரின் இசையுலக சாதனைகளும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், "நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட"ன்னு பாட்டு பாடி நடனமாடுபவர்கள், சீன் பென்னின் டூப்ளிகேட்கள், பிற நாட்டு/மொழி பாடல்களை அப்புடியே அச்சு பிசகாம காப்பி அடிப்பவர்கள்,"கருப்பு எம்.ஜிஆர் கள்", "என்னமா கண்ணு", "என்ன கொடும" வகையறாக்கள் போன்றோருக்கும் அளிக்கப்பட்ட ஹானரரி டாக்டரேட் பட்டங்கள் உண்மையிலேயே  விவாதத்திற்குரிய விடயம்தான்.

முதலில்  டாக்டரேட் என்றால் என்னவென்றும், நம் தமிழ் சினிமாவில் எவ்வாறான டாக்டர்கள் இருக்கிறார்கள் என்றும் பார்ப்போம். பொதுவா  சாதாரண மக்களின் பார்வையில் டாக்டர்ன்னு சொல்றது மருத்துவத்துறையில் பயின்று பட்டம் பெற்றோறரை குறிக்கும் சொல். இதில் மனிதனுக்கு வைத்தியம் பார்ப்போர் முதல்கொண்டு மிருகவைத்தியர், பல்மருத்துவர் (சில வேளைகளில் அக்குபஞ்சர், சித்தவைத்தியம்) எல்லாரையும் பொதுவா டாக்டர்ன்னு சொல்வார்கள். இவர்கள் தொழில்முறை டாக்டர்கள். இதுதாண்டா போலிஸ் டாக்டர்.ராஜசேகர், இளம் நடிகர் அஜ்மல் போன்றோர் மருத்துவக்கல்வி கற்ற தொழில்முறை டாக்டர்கள். பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற காமெடி பீஸ்கள் அக்குபஞ்சர், சித்தவைத்திய வகையறாக்கள்.

 இரண்டாவதாக கல்வித்துறையில் உள்ளவர்கள் பெறுவது. அதாவது  பொதுவாக ஆய்வுகற்கைகளை கற்று Ph.D[Doctor of Philosophy]  ,D.Eng [Doctor of Engineering], D.Sci[ Doctor of Sciences ] , D.Edu [Doctor of Education] போன்ற அதியுயர் பட்டங்களை பெற்றோர். இதில் பல  வகைகள் இருந்தாலும் நமக்கு ஓரளவுக்கு பரிச்சயமான அதியுயர் ஆய்வு கற்கை பட்டம் பி.எச்.டி யே. ஒரு பி.எச்.டியை பெறுவதற்கு ஒருவர் பள்ளிகூட மட்ட பரீட்சைகளில்  அதிசிறந்த புள்ளிகளை பெற்று, இளநிலை, முதுநிலை கற்கைகளை மிகவும் சிறப்பாக கற்று , சிறப்பு சித்திகளை எய்து , அப்புறம்  தரமான பல்கலைகழகங்களிற்கு விண்ணபித்து, அனுமதி பெற்று, மூன்றில் இருந்து ஐந்து வருட காலபகுதியை (நாட்டையும், ஆய்வையும் பொறுத்து காலம் மாறுபடலாம்) முழுநேர ஆய்வில் செலவழித்து, பல ஆய்வறிக்கைகளை இன்டெர்நேஷனல் ஜர்னல்களில்[சர்வதேச ஆய்விதழ்கள்] வெளியிட்டு, கான்பரன்ஸ் [கருத்தரங்கு] அட்டென்ட் பண்ணி, அங்கு தமது ஆய்வு முடிவுகளை விவாதம் செய்து, இறுதியில்  சில நூறு பக்கங்களில் முழுமையான ஆய்வேடு[Thesis] தயார்செய்து, அதனை ஒரு கமிட்டி மதிப்பாய்வு செய்து, அப்புறம் ஒரு வாய்மொழிதேர்வு... ன்னு இன்னும் என்னென்னமோ சிரமங்களை எல்லாம் அனுபவித்து பெறுவது. இதன் மதிப்பு கல்வித்துறையில் உள்ளவர்களுக்கே அதிகம் தெரியும். தமிழ்சினிமாவில்  கவிஞர் மதன் கார்க்கி ஆஸ்திரேலிய குயீன்ஸ்லாந்து பல்கலைகழக தகவல் தொழில்நுட்ப  பி.எச்.டி பட்டதாரி. முக்கியமான விடயம் என்னவெனில், சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்விலும் இவர் தனது டாக்டரேட்டை விளம்பரபடுத்திகொண்டதே இல்லை.
மூன்றாவது வகை என்னவெனில் Honorary Doctorate [கௌரவ முனைவர்!]. அதாவது  சிலர் தாம்சார்ந்த குறிப்பிட்ட துறையில் அல்லது சேவையில் மிகசிறந்த பங்களிப்பினை செய்து தீவிர அர்பணிப்புடன் செயல்படுவர். அவர்களின் பங்களிப்பினையும் அர்ப்பணிப்பினையும் கௌரவிக்கும் முகமாக பல்கலைகழகங்கள் ஹானரரி டாக்டரேட் பட்டங்களை அளிக்கும். நியாயமாக,  யாருக்கு பட்டம் வழங்குவது என்பதை ஒரு தனிப்பட்ட நபர் தீர்மானிக்க முடியாது. பல்கலைகழகங்களில் நடைபெறும் கூட்டங்களில் முதலில் ஒருவர் பரிந்துரைத்து ,பலர் ஆமோதித்து, சிலர் எதிர்த்து, அனைவரும்  கலந்தாலோசித்து,  தேவைப்படின் வாக்களிப்பு நடத்தி இன்னும் என்னென்னமோ நடத்தியே இவை வழங்கப்படவேண்டும். சில நேரங்களில் தகுதியான நபர்களுக்கே வழங்கப்படும் இப்பட்டங்கள், பல நேரங்களில் தகுதியற்ற நபர்களுக்கும் வழங்கபடுகின்றன. இவ்வாறு தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்படும் டாக்டரேட் பட்டங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகலாவிய ரீதியில் உள்ள ஒரு கேலிகூத்தே. முதல் பத்தியில் குறிப்பிடப்பட்ட அனைவரும் பெற்றது இந்த ஹானரரி டாக்டரேட் பட்டங்களையே.
இங்கு ஒரு விடயத்தை நாம் பொதுவாக அவதானிக்கலாம். சமீபகாலத்தில் தமிழ் சினிமாவில் வழங்கப்பட்ட பல ஹானரரி டாக்டரேட் பட்டங்களும் வியாபாரிகளால்(அல்லது அரசியல்வாதிகளால்)  நடாத்தப்படும் தனியார் பல்கலைகழகங்கள், நிகர்நிலை பல்கலைகழகங்கள் மூலமாக வழங்கப்பட்டனவே. இப்பல்கலைகழகங்கள் இது போன்ற ஹானரரி டாக்டரேட் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு  வழங்குவதன் மூல காரணமே, தம்மையும் தமது பல்கலைகழகத்தையும் விளம்பரபடுத்தல் மட்டுமே. பொதுவாக உலகளாவிய ரீதியில் பல்கலைகழகங்கள் தரப்படுதப்படும்.  நாம் மேலே சொன்ன சில  பல்கலைகழகங்கள் தரப்படுத்தலில் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ள (அல்லது அந்த லிஸ்டிலையே இல்லாத) பல்கலைகழகங்களே. வெளிநாடுகளில் நம் தமிழ்சினிமா கதாநாயகர்கள் காசு கொடுத்து வாங்கிய பட்டங்கள் கூட தரப்படுத்தலில் கீழ்மட்டத்தில் உள்ள பல்கலைகழகங்களிடம் இருந்து வாங்கபட்டவையே. இங்கு ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட வேண்டும் சர்வதேச ரீதியில் முதல்தர பல்கலைகழகங்களான எம்.ஐ.டி, ஸ்டென்பர்ட், கார்னெல், கல்டெக் என்பன இவ்வாறான சர்ச்சைக்குரிய ஹானரரி டாக்டரேட் பட்டங்களை வழங்குவதே இல்லை.

இவ்வாறு சில பல்கலைகழகங்கள் தமது சுய விளம்பரங்களுக்காக அரைவேக்காட்டுத்தனமாக வழங்கும்  ஹானரரி டாக்டரேட் பட்டங்களை பெறும் அரைவேக்காடுகள் தமிழ்சினிமாவில் செய்யும் அலப்பறைகள் தான் தாங்க முடியாதவையாக உள்ளன. ஏற்கனவே ஒரு டாக்குத்தர் இருந்தாரு. தற்பொழுது  சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் டைடில் கார்டிலும், விளம்பரங்களிலும்  ஒரு குறிப்பிட்ட நடிகரின் பெயருக்கு முன்னால்  "டாக்டர்" "சீயான்" என இரு பட்டங்கள் போடப்படுகின்றன . அடப்பாவிகளா, "டாக்டர்"ங்குறது ஒரு கௌரவ பட்டம், "சீயான்"ங்குறது தென்தமிழக கிராமங்களில் பொறுக்கிகளை குறிக்கும் ஒரு பட்டம் . ரெண்டையும் நீங்க ஒரே விதமாக தான் அணுகுவீர்களா? நல்லா வருவீங்கடா.

சரி, சிவாஜி, கமலில் இருந்து  இப்போ விஜய், விக்ரம் வரை டாக்டரேட் மலிவாகி  விட்டதே, இடையில் இன்னுமொருவர் லிஸ்டில் விடுபடுகிறாரே, என்று அதை தேடிப்பார்த்தால் அதன் பின் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இருக்கிறது. விஜய், ஷங்கர் போன்றோருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தினால் டாக்டரேட் பட்டம் கொடுத்த போது நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பலரும்  அப்பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகத்திடம்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஏன் நீங்கள் இன்னும் டாக்டரேட் பட்டம் கொடுக்க முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு ஏ.சி. சண்முகம்  " நாம் ஏற்கனவே பலமுறை அவரை அணுகி டாக்டரேட் பட்டம் கொடுப்பதற்கு(!) முனவந்தோம், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் அதனை மறுத்து விட்டார்"  என்று கூறியுள்ளார்.  மேலும் பல வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தினால் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட டாக்டரேட் பட்டதை, அவர் திருப்பிகொடுத்ததுடன் மட்டுமல்லாமல் அவரது "நிராகரிப்பு கடிதம்" ( Letter of Denial ) இன்றும் அப்பல்கலைக்கழக நோட்டிஸ் போர்டில் இருக்கின்றதாம். எத்தனையோ விடயங்களுக்கு ரஜினிகாந்தை வழிகாட்டியாக கொள்ளும் நம் சினிமா நாயகர்கள், இவ்விடயத்திலும் ரஜினியை பின்பற்றலாமே. அல்லது பெற்றுகொள்ளும் கௌரவ டாக்டரேட் பட்டத்தை துஸ்பிரயோகம் செய்யாமலாவது இருக்கலாமே.
அலர்ட்டா இருந்துக்கோ பாஸு, விட்டா இவனுக எங்களுக்கும் டாக்டரேட் கொடுத்துருவாங்க!
Download As PDF

No comments:

Post a Comment