-->

Wednesday, November 21, 2012

ஊடுருவியது முதல் தூக்கு மேடை ஏறியது வரை


2008,நவ.26: கசாப் மற்றும் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பையில் ஊடுருவி  பயங்கர தாக்குதல் நடத்த தொடங்கினர்.
நவ.27: அதிகாலை 1.30 மணிக்கு கிர்காவ் சவுப்பாத்தி அருகில் கசாப் உயிருடன் பிடிபட்டான். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அவன் சிகிச்சைக்காக நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
நவ.29: போலீசிடம் கசாப் வாக்குமூலம் அளித்தான்.
ஸீ 60 மணி நேர தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அனைத்து இடங்களும் பாதுகாப்பு படையினர் வசமானது. 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்கியதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.
நவ.30: போலீசிடம் மீண்டும் வாக்குமூலம் அளித்த கசாப் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
டிச.27/28: கசாபை அடையாள காண அணிவகுப்பு நடந்தது.
2009,ஜன.13: மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக எம்.எல்.தஹில்யானி நியமிக்கப்பட்டார்.
ஜன.16: பலத்த பாதுகாப்புமிக்க ஆர்தர் ரோடு சிறையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பிப்.5: மீன்பிடி படகு குபேரில் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கசாபின் டி.என்.ஏ. மாதிரி ஒத்துப் போனது.
பிப்.20/21: மாஜிஸ்திரேட் ஆர்.வி. சாவந்த் வாகுலே முன்னிலையில் கசாப் வாக்குமூலம் அளித்தான்.
பிப்.22: அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக உஜ்வல் நிகம் நியமிக்கப்பட்டார்.
பிப்.25: எஸ்பிளனேட் பெருநகர நீதிமன்றத்தில் கசாப் மற்றும் 2 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஏப்.1: கசாப் தரப்பு வழக்கறிஞராக அஞ்சலி வாக்மாரேயை சிறப்பு நீதிமன்றம் நியமித்தது.
ஏப்.15: மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது.
ஸீ அஞ்சலி வாக்மாரேக்கு பதிலாக கசாப் தரப்பு வழக்கறிஞராக எஸ்.ஜி.அப்பாஸ் காஷ்மி நியமனம்.
ஏப்.17: மாஜிஸ்திரேட் மற்றும் போலீசிடம் கசாப் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஏப்.20: கசாபுக்கு எதிராக அரசு தரப்பு 312 குற்றச்சாட்டுகளை கூறியது.
ஏப்.29: கசாப் ஒரு மைனர் என்ற அவன் தரப்பு வாதத்தை நிராகரித்த நிபுணர்கள், கசாப் ஒரு மேஜர் என்பதற்கான ஆதாரங்களை அளித்தனர்.
மே 6: 86 குற்றச்சாட்டுக்களின் பேரில் கசாபுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கசாப் மறுத்தான்.
மே 8: தாக்குதலை நேரில் பார்த்த முதல் சாட்சி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்து கசாபை அடையாளம் காட்டினார்.
ஜூன் 23: லஷ்கர் தீவிரவாதிகள் ஹபீஸ் சயீத், ஜக்கி&உர்&ரஹ்மான் உட்பட மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 22 பேருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
ஜூன் 25: கசாப் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 20: நீதிபதி எம்.எல்.தஹில்யானி முன்னிலையில், தான் குற்றவாளி என்பதை கசாப் ஒப்புக் கொள்கிறான்.
நவ.30: கசாப் வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து அப்பாஸ் காஷ்மி நீக்கப்பட்டார்.
டிச.1: கசாப் தரப்பு வழக்கறிஞராக கே.பி.பவார் பொறுப்பேற்றார்.
டிச.16: அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகம் தனது வாதத்தை நிறைவு செய்தார்.
டிச.18: மீண்டும் நீதிமன்றத்தில் பல்டி அடித்த கசாப், தன் மீதான அனைத்து குற்றச் சாட்டுக்களையும் மறுத்தான்.
2010,பிப்.11: மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான பாஹிம் அன்சாரியின் வழக்கறிஞர் ஷாகித் ஆஸ்மி குர்லாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மார்ச் 9: நீதிமன்றத்தில் இறுதி வாதம் நடைபெற்றது.
மார்ச்31: இரு தரப்பு வாதங்கள் முடிந்து, மே 3ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
மே 3: கசாபை குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மே 6: கசாபுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஜூன் 8: தீர்ப்பை எதிர்த்து கசாப் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய, கசாப் வழக்கறிஞர்களாக அமின் சொல்கர், பர்ஹானா ஷா நியமிக்கப்பட்டனர்.
அக்.18: கசாபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரும் மகாராஷ்டிரா அரசின் மனு மற்றும் கசாப் அப்பீல் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.
அக்.19: விசாரணைக்கு, சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆஜரான கசாப், நீதிமன்றத்தில் தான் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியதுடன், ஆத்திரத்தில் வீடியோ கேமராவில் எச்சில் துப்பி தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தான். கசாபின் இந்த நடவடிக்கையை கண்டித்த நீதிபதி, ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அக்.25: சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கசாபும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயிலும் தாக்குதல் நடத்தியது பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பார்த்தனர்.
அக்.27: கசாபுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை நியாயப்படுத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வல் நிகம், அந்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நவ.23: கண்காணிப்பு கேமராவில் பதிவான தாக்குதல் காட்சிகளை நீதிபதிகள் இரண்டாவது முறையாக பார்வையிட்டனர்.
நவ.25: நீதிமன்றத்தில் தனது வாதத்தை தொடங்கிய கசாப் வழக்கறிஞர் அமின் சொல்கர், கசாபுக்கு எதிராக நடந்த விசாரணை ஒருதலைப்பட்சமாக நடந்ததாகவும், வழக்கு விசாரணையை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நவ. 30: கசாபுக்கு எதிராக, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றம்சாட்டப்படவில்லை என்பதால் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அமின் சொல்கர் வாதிட்டார்.
டிச.2: பாகிஸ்தானில் இருந்து கசாப் படகில் வரவில்லை. தீவிரவாதிகள் வந்ததாக கூறப்படும் படகில் 10 பேர் பயணம் செய்யமுடியாது என்று அமின் சொல்கர் வாதம் செய்தார்.
2011, ஜன.17: விசாரணை முடிந்ததை தொடர்ந்து பிப்ரவரி 7ம் தேதிக்கு தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பிப்.7: தீர்ப்பு மீண்டும் பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பிப்.21: கசாபுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜூலை 29: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கசாப் அப்பீல் செய்தான்.
2012,ஆக.29: கசாபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்.23: கசாபின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.
நவ. 5: உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று கசாபின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
நவ.19: மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து புனே எரவாடா சிறைக்கு கசாப் ரகசியமாக மாற்றப்பட்டான்.
நவ.21: காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டான்.
Download As PDF

No comments:

Post a Comment