ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கொடுக்க
மாட்டோம் என்று அடம் பிடித்து வந்த கர்நாடகம், காவிரி நதி நீர் ஆணையம்
கூடும் செப்டம்பர் 19ம் தேதி வரை, காவிரியில் தினமும் விநாடிக்கு 2,500 கன
அடி நீர் திறந்துவிட சம்மதம் தெரிவித்துள்ளது. விநாடிக்கு 2,500 கன அடி
என்பது பெரிய அளவு அல்லதான். நாம் கேட்டதில் பாதி அளவு கூட இல்லைதான்.
ஆனால் அது காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்து வரும்
முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி. இது காவிரியில் தமிழகத்திற்குள்ள உரிமையை
கர்நாடகம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பதின் அடையாளம்.
தமிழக அரசு சற்றும் சளைக்காமல் காவிரிப் பிரச்சினையில் வாதாடியும் போராடியும் வருகிறது. காவிரி நீரில் உரிய பங்கு, உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்றதும் காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டச் சொல்லி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். அந்தக் கடிதத்திற்கு பிரதமரிடமிருந்து பதில் ஏதும் இல்லாத நிலையில் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். உச்ச நீதிமன்றம் கடுஞ்சொற்கள் கொண்டு, பிரதமர் அலுவலகத்தைச் சாடிய பிறகு செப்டம்பர் 19ம் தேதி காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட அது முன் வந்துள்ளது. அந்தக் கூட்டம் நடைபெறும் வரை, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு.
ஆனால் கர்நாடகம் ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக்கட்டை போட்டு, எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. கபினி அணை நிறைந்திருந்தாலும், கிருஷ்ண ராஜ சாகர் அணை நிரம்பவில்லை, அதனால் தமிழகத்திற்குத் தண்ணீர் தரமுடியாது என்று ஒரு நொண்டிச் சாக்கைச் சொன்னது கர்நாடகா. ‘எங்கள் மாவட்டங்கள் வறட்சியில் உள்ளன, எனவே தண்ணீர் தரமுடியாது’ என ஞாயிறன்று கூட கர்நாடக முதல்வர் சொல்லியிருந்தார். இந்தப் பின்னணியில் திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் 2,500 கன அடி தண்ணீர் தர ஒப்புக் கொண்டிருப்பது வரவேற்கத்தகுந்த முடிவு.
சம்பா சாகுபடியில் இறங்குவதா, வேண்டாமா எனக் குழம்பிக் கொண்டிருந்த திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகளுக்கு இந்தச் செய்தி அவர்களது தயக்கத்தைப் போக்க உதவலாம்.
திருவாரூர் மாவட்டம் தமிழகத்தின் முக்கியமான நெற்களஞ்சியம். அங்கு சுமார் ஆறு லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் உறுதி அளிக்கும் முன்னரே, செப்டம்பர் 17ம் தேதியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் சம்பாப் பயிரை விதைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் விவசாயிகள் இருப்பதாக நமக்குக் கடந்த வாரம் கிடைத்த செய்திகள் தெரிவித்தன. அதற்குக் காரணம், செப்டம்பர் 17ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் அது திருவாரூர் மாவட்டத்திலுள்ள எல்லாப் பகுதிகளையும் சென்றடைய மேலும் 10 நாள்கள் ஆகும். கடைமடைப் பகுதியான நாகை மாவட்டத்திலும் இதுதான் நிலை. அக்டோபர் முதல் வாரத்தில் பயிர் வேலைகளைத் துவக்கினால், அறுவடை நேரத்தில் பருவ மழை வந்து விட்டால் உழைப்பும் பொருளும் வீணாகிவிடும் என்று விவசாயிகளுக்கு அச்சம். என்றாலும் சிலர் குறுகிய கால ரகங்களைப் பயிர்செய்து பார்க்கலாம் எனச் சொல்லி வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகம் வாக்குறுதி கொடுத்திருப்பதைப் போல தண்ணீர் தருமானால், அரசு செப்டம்பர் 17க்கு முன்னரே தண்ணீர் திறந்து விட வாய்ப்புண்டு. இடையில் உள்ள நாட்கள் ஒரு சிலவே என்றாலும் அவை விவசாயிகளைப் பொறுத்தவரை முக்கியமானவை.
அரசு தண்ணீர் திறந்து விடுவதோடு நின்றுவிடாமல், அவை விரைவாகக் கடைமடைப் பகுதிவரை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவேளை சம்பா சாத்தியமாகலாம்.
No comments:
Post a Comment