-->

Wednesday, December 5, 2012

பாலியல் படங்கள் - பெற்றோருக்கே தெரியாமல்

    இந்திய தேசத்தில் கிடைத்துள்ள சமூக சுதந்திரம், இணைய சுதந்திரம், தொழில்நுட்பக் கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படவில்லை. காரணம் பெற்றோர்களுக்கே அது எப்படி என்பது என்று தெரியாமல் இருப்பது தான். தீச்சுடும் என்பதை சொன்னால் தான் தெரியும், சிலருக்கு சுடுவாங்கினால் தான் தெரியும். ஆனால் தீச்சுடும் என்பது பெற்றோருக்கே தெரியாமல் இருப்பதால் அதனைச் சொல்லிக் கொடுக்கவும் அவர்களால் இயலாமல் போய்விட்டது. பெற்றோர் ஸ்தானத்தில் இருக்கும் ஆசிரியர்கள், கல்வி நிலையங்கள், மத நிறுவனங்கள், நூல்கள், ஊடகங்கள் என அனைத்து மட்டமும் தீயினை பிரகாசம் தருபவையாக சித்தரித்துவிட்டதால் தீயின் தீயவைகள் தெரியாமல் ஒரு சமூகம் வளர்த்தெடுக்கப் பட்டுள்ளது. இங்கு நான் தீ எனக் கூறியது, சமூகத்தில் புதிதாக வந்துள்ள இணையம், செல்பேசிகள், காமெரக்காள் போன்றவையைத் தான். சில பிற்போக்குத்தனமான மதவாதிகள், பிறவாதிகள் எல்லாரும் இவை தீயது என்பதால் இவற்றை விலக்கும்படி கோருகின்றன. தீச்சுடும் என்பதால் விளக்கேற்றாமல் இருக்க முடியுமா? அதனைப் போன்று தான் இதுவும்.

 அண்மையில் உலகெங்கிலும் இல்லாத அளவுக்கு பாலியல் படங்கள் (டெல்லி எம்எம்எஸ், நொய்டா எம்எம்எஸ், மைசூர் மல்லிகைப்) இந்தியாவில் இருந்து இணையத்தில் ........


வெளிவரத்தொடங்கி உள்ளது. இப்படியான பாலியல் படங்கள் பெரும்பாலானவை பாலியல் தொழிலாளிகளால் நடிக்கப்பட்டு, வியாபாரப்படுத்தப்படுபவைகளைக் காட்டிலும் உண்மையான நபர்களின் அந்தரங்கங்கள் தான் அதிகம் என்பதும், அதிலும் இளையவர்கள் தான் இப்படியானக் காட்சிகளில் தோன்றி உள்ளார்கள் என்பதும் அதிர்ச்சித் தருபவைகள். இணையத்தில் சர்வ சாதரணமாக இந்தவகை காட்சிகள் காணக்கிடைக்கின்றன.

மனித இயல்புகளில் voyeurism, exhibitionism என்பது உள்ளதாக மனோத்துவ அறிஞர்கள் கூறுகின்றார்கள். இப்படியான மன நிலை அனைவரிடமும் எதோ ஒரு வகையில் இருந்தாலும் மனப்பக்குவம் கொண்டவர்கள் இதனை செயல்படுத்துவதில்லை. இந்த இரண்டு நிலை அதாவது voyeurism எனப்படும் அடுத்தவர் அந்தரங்கங்களை மறைவில் கண்டு இன்பம் கொள்பவர்களும், exhibitionism எனப்படும் சொந்த அந்தரங்கங்களை மற்றவருக்குக் காட்டி இன்பம் கொள்பவர்களும் ஒரு வித மன நலக் குறைப்பாடு எனக் கொள்ளலாம். புத்தியுள்ள எந்த மனிதனும் இதனை இழிவாகவே கருதுவார்கள். ஆனால் சிலர் இதனைச் செய்வதில் வெட்கப்படுவது இல்லை. இப்படியான இரு மனநிலைகள் உள்ளவர்களும் இந்திய பாரம்பரிய நாட்டில் அதிகம் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும் அது தான் உண்மை. இப்படியான மனநிலையில் உள்ளவர்களுக்கு இணையமும், செல்பேசி காமெரக்காளும் நல்லத்தீனி போடுகின்றது.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மானத்தோடு இருக்க வேண்டும் என்றுச் சொல்லி வளர்க்கப்படும் ஒரு நாட்டில், எப்படி இந்தப் பெண்கள் இப்படியான அந்தரங்கங்களைப் படம் பிடிக்க இடம் கொடுக்கின்றனர் எனப் பலர் நினைக்கலாம். இப்படியான பல அந்தரங்க காட்சிகளால் பெரிதும் பாதிக்கப்படுபவர்களும் அவர்களே. ஆனால் பாலியல் விடயங்களில் மறைமுகமாகவே போதிக்கப்பட்டு வந்த நம் நாட்டில், சில வேளைகளில் அதுவும் இல்லை எனலாம். பாலியல் அறிவற்றவர்களாய் நாம் இருப்பதும், பாலியல் பகுத்தறிவு என்பது கொஞ்சமும் இல்லாமல் இருப்பதும், பெண் தசைகளை காட்சிப்படுத்தி சினிமா முதல் பத்திரிக்கை வரை வியாபாரம் செய்வதாலும் இதன் தீமையை உணராது இருந்துள்ளோம்.

டெல்லி எம்எம்எஸ், நொய்டா எம்எம்எஸ், மைசூர் மல்லிகைப் போன்ற பல பிரபலக் காட்சிகள் சில ஆண்டுகளுக்கு முன் பரவியது யாவரும் அறிந்த்தே. மாநில வேறுபாடு இன்றி வடக்குத் தெற்கு என அனைத்து பகுதிகளிலும் இப்படியான வக்கிரக் காட்சிகள் பரவியது உண்மைத்தான். இதில் வேடிக்கை இக்காட்சிகளில் பெரும்பாலும் பெண்களின் முகங்களே வருவதும், ஆண்த்தோழனால் காட்ச்சிப் படுத்தப்பட்ட்தும் , பல காணொளிகளில் இந்தக் காட்சிப்படுத்தலை பெண்கள் அறிந்தே உள்ளனர். தெரிந்தே தான் காட்சிகளில் உடலைக் காட்டியுள்ளனர் இவர்கள். உடனே சமூகத்தில் பலர் இவர்கள் மோசமான பெண்கள், இழிகுலத்தார், பணத்துக்காக எனக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் மிகவும் கௌரவமான குடும்பங்களில் இருந்து வந்த பெண்களும் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களான JNU, IIT, போன்றவற்றில் படிப்பவர்களே அதிகம் இக்காட்சிகளில் தோன்றி உள்ளார்கள். புதிதாக கிடைக்கும் செக்ஸ் அனுபவங்களில் ஏற்படும் கிரக்கத்தால், ஆண் தோழன் மீதான அதீத நம்பிக்கையாலும், பல இடங்களில் ஆண்தோழர்களால் ஏமாற்றப்பட்டும் இப்படியான காட்சிகளில் மாட்டிக் கொள்கிறார்கள் இவர்கள். பெண்களைப் போகப்பொருளாகவே காட்டிவிட்ட சமூகத்தில் அவளின் அந்தரங்கங்களை காதலியானாலும், மனைவியானாலும் படம் பிடித்து வெளியிடுவதில் தயங்குவதில்லை இந்திய ஆண்கள். இந்திய பெண்களும் தமது உடலை ஆண் தோழன் காட்சிப்படுத்தவை ஒரு பெருமிதத்தோடு அனுமதித்துள்ளார்கள். உடலின் மீதான் கர்வமும், சினிமாவின் தாக்கமும் அதிகமுண்டு. அனைத்துக்கும் மேலாக தவறு நடந்தால் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அறியாதவர்களாய் இருந்துள்ளனர் இவர்கள்.

மேற்கில் பல இளம் ஆண்களும், பெண்களும் தம்மை அந்தரங்கங்க வாழ்வில் ஒரு போர்ன் ஸ்டார்களாகவே நினைத்துக் கொண்டு இப்படியான காட்சிப்படுத்துதலை செய்கிறார்கள் என அமெரிக்காவில் போர்னோகிராபியை எதிர்த்துப் போராடும் வொல்ஃப, ஆன்றியா தோவ்ர்கின் கூறுகின்றார்கள் ( 1 ). இணையத்தில் போர்னோ தளங்களில் வரும் பாலியல் உறவுகளை உண்மை என அதனை தொடர்ந்து கண்டு களித்து வருபவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மையான காம உணர்வை போர்னோ தளங்கள் பிரதிப்பலிப்பது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். போர்னோ தளங்களில் பார்ப்பவைகளை தமது அந்தரங்கங்க வாழ்விலும் செயல்படுத்த எண்ணும் ஆணும், பெண்ணும் இக்காட்சிகளை படம் பிடித்தி இரசிக்கின்றனர். சில வேளைகளில் பெண்ணுக்கு தெரியாமலும் ஆணால் வெளியிடப்பட்டுவிடுவதும், ஏன் இருவருக்கும் தெரியாமலும் இக்காட்சிகள் கசிந்துவிடுவதும் உண்டு. ஒருமுறை இக்காட்சிகள் கசிந்துவிட்டால் அவற்றை இணையத்தில் கோடானுகோடி தளங்களில் சென்றடைந்துவிடுகின்றது. இவற்றை சைபர்கிரைம் கொண்டு போராடினாலும் முற்றாக அழிக்க இயலாத ஒன்று. அப்படி அழிக்க எடுக்கும் காலத்துக்குள் அதனைப் பலர் கண்டுவிடுகிறார்கள். இதனால் சமூகத்தில் அந்த நபர்கள் தலைகுனிவை சந்திக்கவேண்டி வரும். இளம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். அதனை இட்டுக்கட்ட முடியாது தற்கொலை முயற்சிகளும் நடந்துள்ளன.

சென்னையில் ஒரு ஆணும், பெண்ணும் இணையத்தில் கொஞ்சி விளையாடும் காட்சி, ஆந்தியா குன்றூரில் கல்லூரி மாணவர்கள் இணையகத்தில் நெருங்கி இருந்தக் காட்சிகள், ஏடிஎம்சென்றடில் முத்தமிடும் காட்சிகள் எனப் பல நடந்தேறி விட்டன. இவற்றால் அம்மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்திருக்கின்றார்கள். இது எதிர்காலத்தில் பெரும் மன உளைச்சலையும், நம்பிக்கையற்ற தன்மையையும் உருவாக்கி விடும். இந்தக் இணையக் கலாச்சாரம் மேல்தட்டு சமூகத்தில் மட்டுமில்லாமல், நடுத்தட்டு, கீழ்த்தட்டு என அனைத்து பிரிவுகளில் உள்ளதை இணையக் காணொளிகள் நிரூபிக்கின்றது. இப்படியான காட்சிகளை வெளியிடும் தமிழ் இணையம் ஒன்று அனைத்து தமிழ் இணையத்தை விடவும் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருப்பதை நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இப்படியான செல்பேசிகள் பெண்களைத் தெரிந்தோ, தெரியாமலோக் காட்சிப் படுத்துவதை அண்மைய தமிழ் சினிமாக்களும் பிரதிப்பலித்துள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக ஈரம் படத்தில் இளம் பெண்களைக் காதலித்து படம் பிடித்து விற்கும் இளைஞரையும், தூங்காநகரம் படித்தில் உடுப்பகங்களின் உடைமாற்றும் அறையைப் படம் பிடிக்கும் செயல் போன்றவற்றால் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், படித்த பெரும் பாலான மக்கள் இதனை இதனால் வரும் பின்விளைவுகளைப் பற்றி பெரிதும் கவலைப்படாது இருப்பது வேதனையானது. பள்ளிப் படிக்கும் பெண்களிடமும், ஆண்களிடமும் செல்பேசிகள் மிகவும் சாதரணமாக உலாவருகின்றன. எனது பிள்ளை இப்படிச் செய்ய மாட்டாள் என பெற்றோரும், பெற்றோருக்கும் என்னத் தெரியும் என பிள்ளைகளும் தவறு செய்ய வாய்ப்பாய் அமைகின்றது. இந்திய சமூகம் சில விசயங்களை வெளிப்படையாக பேசாமல் இருப்பதே இப்படியான பாலியல் பகுத்தறிவின்மைக்கு காரணமாக இருக்கின்றது. தாயானவள் மகளிடம் செல்பேசியினைக் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும். குதர்க்கமாகவும், ஒழிவுமறைவாகவும் பிள்ளைகளிடம் கூறுவது அவர்களை எரிச்சல் அடையச் செய்யுமே தவிர விழிப்புணர்வை ஏற்படுத்தாது. செல்பேசிகள், இணையம் போன்றவற்றில் இருக்கும் பாதிப்பையும் அதனால் ஏற்படும் எதிர்கால பிரச்சனைகளையும் தாய்மார், தந்தைமார், ஆசிரியர், மதகுருமார், செவிலியர் வெளிப்படையாக பேச வேண்டும். திருமணத்துக்கு முந்திய உறவுகளைப் பற்றியும், கர்ப்பங்களைப் பற்றியும் தவறானக் கற்பிதங்களை சினிமாவும், ஊடகமும் செய்துவருவது பிள்ளைகளைக் குழப்பிவிடுகிறது. செய்தால் என்ன என்று தான் நினைக்கிறார்கள்? அவற்றால் வரும் இழுக்கத்தை பெற்றோரோ, பொறுப்பானவர்களோ அறிவுறுத்துவது இல்லை. சில இடங்களில் தவறு நடந்தபின் பெற்றோர் பிள்ளைகளைக் கண்டிப்பதும் கொடுமைப் படுத்தப்படுவதும் உண்டு. சில இடங்களில் பெற்றோரே பிள்ளைகளுக்கு தவறான முன்னுதாரணமாய் இருந்துவிடுவதும் உண்டு. சில இடங்களில் பெற்றோர் பிள்ளைக்களை காக்கத்தவறினாலும், சுற்றத்தார் கண்டும் காணமலும் இருந்துவிடுவது நம் நாட்டின் மக்களின் மன்நிலையின் முதிர்ச்சியற்றவர்கள் எனக் காட்டுகிறது. பக்கத்து வீட்டில் தவறு நடந்தாலும் அதனை சரி செய்யும் தார்மீகப் பொறுப்பு நமக்கு உண்டு என்பதை அறிய வேண்டும்.

படித்த இளையவர்கள் பலர் இப்படியான வக்கிர காணொளிகளை எடுப்பதும், விநியோகிப்பதும், அவ்வாறாண காட்சிகளுக்கு ஆதரவு தருவதும் மன்நோயின் வெளிப்பாடே. ஆண், பெண் புரிதலற்ற சமூகத்தின் விளைவு. அதே போல ஆண்தோழனுடன் நெருக்கமாக இருக்க முனையும் பெண்கள் பாலியல், சமூக முதிர்ச்சியற்றவர்களாய் இருப்பதும் வேதனையானது. பெரிய கல்வி நிலையங்களில் படிப்பதாலும், நவநாகரிகமாய் வாழ்வதாலும் முதிர்ச்சியுற்ற மனிதர்களாக மாற முடியாது. நிகழ்காலம், எதிர்காலம் பொறுப்புணர்வு என்பதையும், பாலியல் விடயங்களையும், அவற்றால் வரக்கூடிய தீமைகளையும் பிள்ளைகளுக்கு படிப்பித்தல் மிகவும் அவசியமாகும். சமூக மாற்றத்தையும், நாகரிக வளர்ச்சியையும் நம்மால் தடுத்து வாழ் இயலாது. ஆனால் அவற்றைப் பக்குவமாக பாவிக்கவும், அதன் நன்மை தீமைகளை ஆராயும் அளவுக்கு இந்த தேச மக்கள் முதிர்ச்சி அடைதல் அவசியம். இவ்வாறான இணைய ஒழுங்கீனங்களில் ஈடுபடுபவர்களும், ஆதரிப்பவர்களும் ஒன்றை மறந்துவிடக் கூடாது, நாளை இந்தச் செயல்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்.

இப்படியான செயல்களில் அல்லது காட்சிகளைப் பார்ப்பதில் இருந்து விடுபட முடியவில்லை என்றால் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

1. தெகல்கா இணையத்தளம்
2. வைட் ரிப்பன்

sirkaali sittappu.
Download As PDF

No comments:

Post a Comment