03/09/2011 இல் 12:00 (அப்துல் வஹ்ஹாப் பாகவி, இமாம் கஜ்ஜாலி)
ஆழமான நெற்றிக் காயத்துடன் தளர்ந்து போய்ப் படுத்திருந்த அலியார்
(‘அறிவு எனும் நகரத்துக்கு நுழைவாசல்’ என்று ரசூல் (ஸல்) அவர்களால்
பாராட்டப்பட்ட அலி இப்னு அபீதாலிப்) தமது வாரிசுகளுக்குக் கொடுத்த அறிவுரை :
“.. கொலை நோக்கத்துடன் நான் வன்மையாகத் தாக்கப்பட்டிருக்கிறேன்.
இதிலிருந்து நான் பிழைத்துக் கொள்வேனா – இல்லை, இறந்து விடுவேனா? நான்
பிழைத்துக் கொண்டாலும் இறந்துவிட்டாலும் (நச்சேற்றிய வாளினால் என்னைத்
தாக்கிய) ‘இப்னு முல்ஜம்’ குற்றவாளிதான். இதனால் அவனைத் தண்டிக்கும் உரிமை
எனக்கு வருகிறது.
“இன்றைய நாளையேனும் என்னால் தாண்டிச் செல்ல முடியுமா என்று தெரியாத
நிலைமையிலிருக்கிற நான் அவனைத் தண்டிக்க முடியாது. எனவே என் உரிமையை
நீங்கள் கையில் எடுத்துக் கொள்ளலாம்.
“நன்கு சிந்தனை செய்து பார்த்து முடிவெடுங்கள். அவனை தண்டித்துத்தான்
ஆகவேண்டுமா என்று அமைதியோடு நினைத்துப் பாருங்கள். அவனை மன்னித்து விடுகிற
மனப்பக்குவம் உங்களுக்கு கிடையாது என்றால் அவனுக்குத் தண்டனை கொடுங்கள்.
ஆனால் -
“அவன் என்னை எப்படிக் காயப்படுத்தினானோ அப்படித்தான் நீங்கள் அவனைக்
காயப்படுத்த வேண்டும். சிறிதளவும் வரம்பை தாண்டிவிடக் கூடாது. சினத்தின்
தூண்டுதலால் அவனைக் கட்டிவைத்து சித்திரவதை செய்து விடாதீர்கள். ‘பிறரைக்
கடித்துக் குதறுகிற வெறிபிடித்த நாயைக்கூடச் சித்திரவதை செய்யக்கூடாது’
என்று பெருமானார் கூறியிருக்கிறார்கள்.
’ஒரு செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: இப்னு முல்ஜமுக்குத் தண்டனை கொடுப்பது – நடந்த ஒன்றை நடக்காத ஒன்றாக மாற்றிவிடாது!
“மிகுந்த சிரமத்துடன் நீண்டநேரம் நான் பேசிவிட்டேன். இப்போது நான் ஒரு
தீர்மானத்துக்கு வந்திருக்கிறேன். கவனத்துடன் கேட்டுக் கொள்ளுங்கள். அவனைத்
தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டு என்பது உண்மைதான். ஆனால் -
“அது உரிமைதானே தவிர, கடமை அல்ல! எனவே அவனை மன்னித்து விடுதலை
அளிக்கிறேன். நான் இறந்து விட்டால், ‘எங்கள் தலைவர் கொலை செய்யப்பட்டு
விட்டார்!’ என்று குரல் எழுப்புவதன் மூலம் புதியதொரு ரத்தக் களரியை
உண்டாக்காதீர்கள். நீங்களும் அவனை மன்னித்து விடுங்கள். பிறருக்குத்
தெரியாமல் நீங்கள் செய்த குற்றங்களை இறைவன் மன்னித்தருள்வான்!”
***
நன்றி : அஃப்சரா பதிப்பகம்
***
மேலும் பார்க்க (pdf) :
No comments:
Post a Comment