-->

Friday, October 12, 2012

வன்புணர்வு - கடுமையான தண்டனை தேவை...




இன்றைக்கு மொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்திருப்பது ஹரியானாவில் நிகந்திருக்கும் தொடர் வன்புணர்வுகள்.அதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை பற்றி பார்ப்பதற்கு முன்... ஆதிக்க, ஆணாதிக்க பயங்கரவாதிகளின் இந்த கொடூர செயல்களை கடுமையான தண்டனை மூலமே குறைக்க முடியும். தண்டனைக்கு பயந்து ஆதிக்க சாதியின் ஆணாதிக்க திமிர் ஒழிந்து விடுமா? குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். அந்த கடுமையான தண்டனை என்பது மரண தண்டனையாகவும் இருந்தால் தவறில்லை.

சென்ற 10.10.2012 அன்று உலகெங்கும் "மரண தண்டனை எதிர்ப்பு நாள்', அனுஷ்டிக்கப்பட்டது. மரண தண்டனை கொடுக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக அனுதாபம் படும் நாம், வன்புணர்வுகளால் உயிர் இருக்கவே பிணமாக வாழும் பெண்களை மறந்து விடுகிறோம். மரண தண்டனைக்கு நாமும் எதிரிகளே ஆனாலும் - பாலியல் குற்ற செயல்களுக்கு மாத்திரம் - மரண தண்டனையை சிபாரிசு செய்கிறோம். காரணம், பிற குற்ற செயல்களுக்கும், பாலியல் குற்றத்திற்கும் வேற்றுமை உள்ளது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை இல்லாதொழிக்கிறது - வன்புணர்வு. அவளை நடை பிணமாக்குகிறது.

"ஐந்து வயது குழந்தையை வன்புணர்வு செய்தவனுக்கு மரண தண்டனை அளித்தபோது முற்போக்கு மேதாவி கேட்டார். "இதனால் மட்டும் வன்புணர்வு குறைந்து விட போகிறதா என்று? மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்" என்றார். குற்றவாளிகளுக்கு பரிந்து பேசக்கூடாது மனித உரிமை. ஆணாதிக்க சிந்தனை - மனித உரிமைக்கு பின்னால் பதுங்கி கொள்கிறது. இந்த குற்றத்தை செய்ய படித்தவன், படிக்காதவன், இருப்பவன், இல்லாதவன் என்கிற வேற்றுமை இல்லை.

மதுரையில் ராதாகிருஷ்ணன் என்கிற ஐம்பத்தி ஐந்து வயது மருத்துவன், தம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பள்ளி மாணவியை கெடுத்திருக்கிறான் மயக்க மருந்து தந்தும், கொடூரமாக தாக்கியும். இது ஏதோ உணர்ச்சி வேகத்தில், அறியாமையில் செய்தது அல்ல. பல பேரை சூறையாடி தப்பி கொண்டே இருந்து இருக்கிறான். இப்போது மாட்டி கொண்டான். தாம் என்ன குற்றம் செய்கிறோம் என்று அந்த மருத்துவனுக்கு தெரியாதா? காவல்துறையினரும் - தம் அதிகாரத்தை பயன்படுத்தி இத்தகைய குற்றத்தை புரிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இத்தகைய மிருக செயலுக்கு மரண தண்டனை அளிப்பதில் தவறில்லை. இன்றைக்கு ஹரியானா வன்புணர்வு நிகழ்வுகளுக்கு காரணம் சொல்கிறார்கள். "இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள், அதிக அளவில் நடப்பதற்கு, அரியானாவில், ஆண்களை விட, பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம். ஆண்களுக்கு திருமணம் முடிக்க பெண் கிடைப்பது கடினமாக உள்ளது' என்றெல்லாம் சொல்கிறார்கள். இத்தகைய காரணங்களே - உண்மையாக இருக்கும் என்று நம்பலாமா?

பசியால் ஒருவன் திருடினான், பழிக்கு பழியாக கொன்றான் என்பன போன்றவை - குற்றச்செயல்களுக்கு காரணம் கற்பிக்கிற நியாயங்கள் - ஒரு போதும் ஏற்க முடியாதவை. ஆண், பெண் விகிதாச்சாரத்தில் இடைவெளி இருக்கலாம். ஆனால் அதற்கும் வன்புணர்வுக்கும் முடிச்சு போடுவது தவறு. வன்புணர்வு கொடூர நிகழ்வை வாசியுங்கள். "ஹிசார் மாவட்டத்தில், தலித் பெண் ஒருவர், 12 பேரால், கற்பழிக்கப்பட்டார். அவர் பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகள், மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்டு, எம்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டன. அதனால், அவமானம் அடைந்த அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்."

வன்புணர்வுக்கு பிறகு தொடர்ந்துள்ள கொடூரங்களை வயது கோளாறு என்றா எடுத்து கொள்வது. அதிலும் தலித் பெண்ணாக தேடி செய்யும் வன்புணர்வை - இவர்கள் சொல்லும் காரணம் கொண்டா பார்ப்பது. முடியாது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் - இத்தகைய கொடூரங்களை திருமணமானவர்கள் செய்வதில்லை என்றாகிறது. அது உண்மையா?​குற்றவாளிகளை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக - திருமண வயதை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை தருகிறார்கள்.

இதுவும் ஆதிக்க சாதியின் பிற்போக்கான வாதம். நாட்டை இன்னும் நூறாண்டுகளுக்கு பின்னே தள்ள பார்க்கிறார்கள். அத்தோடு "கற்பழிப்புகள், அதிக அளவில் நடப்பதற்கு, தொலைக்காட்சிகளும், திரைப்படங்களுமே காரணம். இவைதான், இளைஞர்களை, மோசமான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன." என்றதும் சரி தானா. தலித் பெண்கள் மீதான வன்புணர்வை பூசி மெழுக ஆதிக்க சாதி கிராமத்து பஞ்சாயத்துகள் காரணம் தேடுகிறார்கள். பாதிக்கப்படுவதெல்லாம் தலித் மக்களே எனும்போது - இவர்கள் சொல்லும் காரணங்கள் அனைத்தும் பொய்யாகிறது. காரணங்களை சொல்லி கொண்டிராமல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

இது தேசிய அவமானம். நாடு சுதந்திரமடைந்து அறுபத்தி ஐந்து வருஷமாகியும் - மக்களுக்கு சமூகநீதியும், பெண்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை என்பதும் மிக பெரிய வெட்கக்கேடு. அதிலும் நாட்டில் வளர்ச்சி அடைந்துள்ள மூன்றாவது மாநிலத்தில். குற்றவாளிகள் - சட்டத்தின் ஓட்டைகள் வழியே தப்பிவிடக்கூடாது. தப்பி விட வாய்ப்புள்ள காரணத்தினாலேயே பல குற்றங்கள் அரங்கேறுகிறது. அவ்வண்ணமே "காங்கிரஸ்க்கு கெட்ட பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் செய்யும் சதி" என்கிறது காங்கிரஸ்.

இது குற்றங்களை ஒப்புக் கொள்ள திராணியற்ற மனோபாவம். தவறுகளை ஒப்பு கொண்டால் தான், குற்றங்களை நேர்மையான பார்வையில் விசாரிக்க முடியும். ஆதிக்க சாதிக்கு பயந்து - கண்டும் காணாமல் இருக்கிற போக்கை தவிர்க்க முடியும். "சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கற்பழிப்பு குறைவு" என்று அசிங்கமாக தன்னை தானே மெச்சிக்கொள்கிறது காவல்துறை. அதே நேரம் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி - பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி கொண்டிருக்கும் போதே, மாநிலத்தில் மற்றொரு வன்புணர்வு.

ஆறுதல்களை விட முக்கியம் - அதீத நடவடிக்கை. கடுமையான தண்டனை. அந்த கடுமையான தண்டனை என்பது மரண தண்டனையாகவும் இருந்தால் தவறில்லை. அதிகப்பட்ச தண்டனை குற்றங்களை ஒழிக்கிறதோ இல்லையோ, குறைந்தப்பட்சமாய் கட்டுப்படுத்தும்.
Download As PDF

No comments:

Post a Comment